பக்கம் எண் :

பக்கம் எண் :130

குலோத்துங்க சோழனுலா
 


 



660









670
தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும்
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய
வெற்றிக் களியானை மேல்வந்தான் - பற்றி
இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்கா
ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில்
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
சிறந்த திருவுள்ளுஞ் செல்லச் - சிறந்தவன்
ஆக நகத்திருந்தா ளாகத் திருவுள்ளக்
கோக னகத்திற் கொடுசென்றான் - நாகிள
நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி
முருகு கமழ முகந்து முகந்து
பருகு மடமகளைப் பாரா - அருகு
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலரணைமே லிட்டார் - அடுத்தொருவர்



 

வரிகள் 658 - 672 : பெருமாளும் .............மலரணை மேலிட்டார்

சொற்பொருள் : குலோத்துங்கசோழனும் வெற்றிக்குடை நிழலின்கீழ் வடக்கின்கண்ணுள்ள மேருமலைபோன்ற வெற்றி தரத்தக்க மதயானைமேல் உலாவந்தான். ஒருவர் நோக்கத்தை யொருவர்பற்றி அவ்விருவரும் தம்மில் எதிர் எதிராக நோக்கி ஒருவரைப்போலவே காதலால் ஒத்திருந்தார். சோழமன்னனுக்குத் தான் மறந்த கடல்கடையவந்த திருமகள்மீது சிறந்த தெளிந்த மனஞ்செல்லத் தன் மார்பாகிய மலையில் திருமகள் இருப்பதனால் இவளைத் தன் சிறந்த மனத்தாமரைமலரில் வைத்துக்கொண்டு சென்றான். பூமியை யோரடியால் அளந்து கவர்ந்து இரண்டு தோளினும் வைத்த திருமாலின் (சோழனுடைய) அழகினை, மிகவும் இளமைவாய்ந்த மான்போன்ற மருண்ட நோக்கத்தான் முகந்து முகந்து உண்ட மடமைவாய்ந்த அத் தெரிவையைப் பார்த்து அருகுசென்று தொட்டுத் தழுவி அவளைக் கண்டுமயங்கிய தாய்மார்கள் பூப்படுக்கைமேல் எடுத்துப் போட்டார்கள்.

விளக்கம் : எதிர் கொண்டு சென்ற அத் தெரிவைக்கு எதிரே குலோத்துங் சோழன் வந்தான். அவன் ஏறிவந்த யானை மேருமலைபோலத் தோன்றியது. பெருமாள் - திருமால். இஃது ஈண்டுக் குலோத்துங்கனுக்காயிற்று. பற்றி என்பது கண்பார்வை ஒன்றையொன்று கவ்வியது என்றது. கையினாற் பற்றுவதுபோலக் கண்ணினாற் பற்றினர் எனக் கொள்க. பற்றுதல் - இழுத்துக்கொள்ளல். "அண்ணலும் நோக்கினானவளும் நோக்கினாள்" எனவும், பருகிய நோக்கெனும் பாசத்தாற்பிணித் தொருவரை யொருவர்தம் முள்ளம் ஈர்த்தலால், வரிசிலை யண்ணலும் வாட்கண் ணங்கையும் இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார்" எனவும் வரும் கம்பர் (மிதிலைக் 37) வாக்கின் கருத்தினை யொப்புநோக்குக. இருவரும் பற்றியிழுத்து ஒருவரையொருவர் தம்முள்ளத்திலமர்த்தினர் என்பது கருத்து. எனவே இருவரும் ஒருவர்மேலொருவர் காதல் கொண்டு காதலால் இருவரும் ஒத்திருந்தனர் என்பது. நோக்கா - நோக்கி; இது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். குருசில் - தலைவன்; இது சோழனை யுணர்த்தியது. திருமால் முன்னர்க் கடல் கடைந்தபோது திருமகள் அக் கடலிற்றோன்றினள் எனவும், திருமால் பின்னர்க் குலோத்துங்கசோழனாக வந்து பிறந்ததனால் அவளை மறந்தாள் எனவும், மறக்கப்பட்ட திருமகள் தானே யெதிர்வந்தபோது அன்பு தானே தோன்றியது எனவும் கருத்தமைய "மறந்த கடல்.....திருவுள்ளுஞ் செல" என்றார். முன்ஒரு திருமகள் மார்பிற் பதிந்திருப்பதால் இவளை மார்பில் வைத்தற்கிடமில்லை யென்றுணர்ந்து உள்ளத்தாமரையில் இருந்தினான் என்பார், "ஆகநகத்........ கோகனகத்திற்கொடுசென்றான்" என்றார். ஆகம்+நகம் = ஆகநகம் - மார்பாகிய மலை. கோகனகம் - தாமரை. உள்ளக்கோகனகம் - மனத்தாமரை - இவை உருவகம். மால் செவ்வி மடநோக்கால் முகந்து முகந்து பருகுமடமகள் எனக் கூட்டுக. மால் - குலோத்துங்கன். செவ்வி அழகு. செவ்வியை என இரண்டனுருபு விரித்துக்கொள்க முகந்து முகந்து : அடுக்கு இடைவிடாமைப் பொருளில் வந்தது. பருகுதல் - குடித்தல். முகத்தல் - அள்ளுதல். கையால் அள்ளி அள்ளிக் கள்ளினை வாயாற்பருகி வயிற்றுள் நிரப்புதல் போலக் கண்ணால் அழகினை நோக்கி நோக்கி உள்ளத்திலெண்ணி யுள்ளிருத்தினாள் எனக் கொள்க. கள்ளைப் பருகினார்க்கு மயக்கம் வந்ததுபோல இவளுக்கு மயக்கம் வந்தது எனக்கொள்க. முகந்து, பருகி என்றவை, நோக்கத்திற்குரிய வினைகளல்ல ஒப்புடைய வினைகள் எனக் கொள்க. பாரா - பார்த்து. அவள் மயங்கிய நிலையில் உயிரற்ற உடல்போல் நின்றாள் என்பது தோன்ற "எடுத்து மலரணைமே லிட்டார்" என்றார். தானே இயங்காப்பொருள்களை எடுத்துப்போடுவது போலப் போட்டார் அவளை; உணர்ச்சியற்றுக்கிடந்தாள் மலரணைமேல் என்று கொள்க. முருகு - மணம், இளமையும் ஆம்.
செவ்வி முருகு கமழ - அழகும் இளமையும் தோன்ற என்றாவது, அழகாகிய மணம் வீச என்றவாது விரிக்க. மடுத்து - கைகளைக்கொடுத்து, முயங்கி - தழுவி. எடுத்து - தூக்கி. சோழன இத் தெரிவையை உள்ளத்திருத்திச் சென்றான். தாய்மார் இவளை யெடுத்துப் படுக்கையிற் போட்டார் என்க.