பக்கம் எண் :

பக்கம் எண் :131

குலோத்துங்க சோழனுலா
 


 




675




680
எடுத்து மலரணைமே லிட்டார் - அடுத்தொருவர்
கொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்
துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப்
பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி
அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் - கிளிக்கிளவி



 

வரிகள் 672 - 680 : அடுத்தொருவர் .............சிறிதே தெளிந்தாள்

சொற்பொருள் : அன்னம்போன்ற பெண்ணே! நின் கொண்டையிற் புனைவதற்காக ஒருவராலும் அடுத்துச்சென்று பறித்துக்கொள்ள அரிதாய கற்பகப் பூமாலையும், இடையில் உடுத்துவதற்காக நெய்வதற்கு அரிய பொன்னாடையும், அல்குலிற் புனைவதற்குச் செய்தற்கரிய துளையமைந்த மாலையாகிய மணிக்கோவையும், தோளிற் புனைவதற்கு உயர்ந்த பொன்னாற் செய்யப்பட்ட வாகுவலயப் பணியும், கொங்கையிற் பூசுவதற்குக் காவிரியாறு பாயும் புகார்நகரில் உள்ள சந்தனக்குழம்பும், செவிகளிற் புனைவதற்கு வல்லத்திலுள்ள இளைய பனங்குருத் தாற்செய்ய தோடும் உன் காதலனாகிய குலோத்துங்கசோழன் அளிக்கப்பெற்று நாம் வந்தோம் என்று கூறி அவள் மனத்தைத் தெளிவிக்க அத் தெரிவை சிறிது மனந்தெளிந்தாள்.

விளக்கம் : அன்னமே : விளி. அன்னம் உவமையாகுபெயராய் அத் தெரிவையையுணர்த்தியது. கொண்டைக்கும் நீவிக்கும், அல்குற்கும், தோளுக்கும், காதிற்கும் என்பவற்றிலுள்ள உம்மைகளைப் பூமாலை, பொற்றுகில், கோவை, பணிவளையும், பனந்தோடு இவற்றிற்சேர்த்துக் கொண்டைக்குப் பூமாலையும் நீவிக்குப் பொற்றுகிலும் என்பனபோல எல்லாவற்றையுங் கூட்டுக. நீவி - துகிலுக்குப் பெயர்; இஃது உடையுடுத்தும் இடையையுணர்த்தியது. கொய்யாத, நொய்யாத, செய்யாத என்ற எதிர்மறைப் பெயரெச்சங்கள் அவ்வப்பொருளின் அருமையைக் காட்டியது. கொய்யப்படாத கற்பகப்பூமாலை எனவே இக் கற்பகப்பூமாலை ஒருவராலும் மலர்பறித்துக் கட்ட வியலாது. குலோத்துங்கன் உன் பொருட்டாகவே அருமையாகக் கட்டுவித்துத் தந்தான் என அதன் அருமை தோற்றுவித்தனர். இதுபோலவே மற்றைப் பொருள்களையும் விளக்குக. தொங்கல் - மாலை. துளைக்கோவை - துளைசெய்து கோக்கப்பட்டவை. எட்டுக்கோவை, பதினாறு கோவை, முப்பத்திரண்டு கோவை என மாலைபோலக் கோக்கப்படுவதால் தொங்கல் துளைக்கோவை என்றார். "ஏழு கோவைகளாற் சூழ்ந்த எழின்மணி மேக லைப்பேர், காழிரு நான்கே காஞ்சி, கலாபமீ ரெட்டுத் தாமம், தாழுமூ வாறு கோவை சாற்றிய பரும மென்ப, வீழுமென்ணான்கு கோவை விரிசிகை யென்ப தாமே" (சூடாமணி நி. எ. 27) என இவற்றின் பெயர் காண்க. அல்குலைச் சூழ்ந்த கிடக்கும் அணியாம் இது. பணி வலையம் என்பதை வலையப்ப்பணி என மாற்றுக. வாகுவலையமாகிய அணி என்பது பொருள். பொன்னி - காவிரி. புகார் - காவிரிப்பூம்பட்டினம். இந் நகரில் உள்ள சந்தனக்குழம்பு நன்மண முடையது எனவும் வல்லத்திற் செய்யப்பட்ட காதணி சிறந்தது எனவும் விளங்கும். இத்தகைய சிறந்த ஆடையணிகளை அரசன் எம்மிடத்தே கொடுத்தான்; அவற்றைக் கொடுவந்தேம்; இனி ஆத்திமாலையும் கொடுப்பான். உன்மேற் காதலுடையவனெனக் கண்டுவந்தேம் என்று, பொய்யுரை பல புகன்று அத் தெரிவை மனத்தைத் தேற்றினர் எனவும், அவளும் அவ் வுரையைப் பற்றுக்கோடாகக் கொண்டு சிறிது தெளிந்தாள் எனவும் கொள்க. தெரிவையின் செயல் முடிவுற்றது, இனிப் பேரிளம் பெண்ணின் செயல் கூறுகின்றார்.