வரிகள் 680 - 694 : கிளிக்கிளவி .............வருதமரங்கூற சொற்பொருள் : கிளியின் சொல்லைப்போல இனிமையாகப் பேசும் மற்றொருத்தி (பேரிளம்பெண்) அவள் செந்தாமரைப்பூவின் மீது என்னோடு பகைத்து ஒருத்தி வாழ்கின்றாள் என்று திருமகளைப் பழித்து வெறுத்துக் கூறும் சிறந்த அழகுச் செருக்குடையவள். தென்னைமரத்தின் இளம்பாளையிற் சுற்றிலும் கட்டிய குடத்தின் ஊறிவழிந்த மதுவைப் பொன்வள்ளத்தில் ஊற்றி மீண்டும் வயிரமடலொன்றில் வடித்துக்கொடுக்க அதில் ஒரு துளியை நகத்தாற் றெறித்து வண்டுகளை நீக்கி அமையம் நோக்கிக் கையில் ஏந்தி முகமன்கூறி அருகிலிருந்து ஒளிபொருந்திய சந்திரன்போன்ற முகமுடைய பாங்கியொருத்தி கொடுப்ப அக் கள்ளையுண்டு குதலை மொழி பேசிக் குயிலுக்கும் கிளிக்கும் நடுக்கமுண்டாக்கி உலகத்தில் தன்னெற்றியை வியர்வையால் அழகுறச்செய்து குலோத்துங்க சோழன் முன்செய்த கொடுமையை மறந்து வெளிவிட்டு அஞ்சாமல் அவ்விடத்தினின்றும் புறப்ப்டடுத் தன்னருகேயிருந்த பாணனை நோக்க, அவன் குலோத்துங்கன் உலாவரும் முரசொலி முதலியவை முழங்குகின்றன என்றுகூற, விளக்கம் : கிளிக்கிளவி - உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. கிளி - ஆகுபெயராய் அதன் சொல்லுக்காயிற்று. கிளிமொழிபோன்ற கிளவியுடையாள் என விரியும். கிளவி - சொல். அழகில் எனக்கு ஒருவரும் நிகரிலர். செந்தாமரை மலர்மேல் ஒருத்திதான் இருக்கிறாள் என்று நினைத்து அத் திருமகளைச் சினந்து நோக்கும் தன்மையுடையவள் என்பது தோன்ற "திருமகள் வாழுமெனச் செறுவாள்" என்றார். வாழும் - வாழ்வள். என - என்று கருதி. செறுவாள் - சினப்பாள், வெறுப்பாள். திருமகளெயன்றி வேறு பகையில்லை என்று கருதுவாள் என எழிலின் சிறப்புக் கூறினர். தென்னம் பாளைகளை யரிந்து அவற்றிற் பல குடங்களைக் கட்டித் தொங்கவிட்டுப் பின்னர் அக் குடங்களையிறக்கி அதில் நிறைந்த கள்ளினை வடித்துக்கொடுத்தல் மரபு. கள்ளைக்குடிக்குமுன் ஒருதுளியை நகத்தாற் சுண்டித் தெறித்துவிட்டு அதிற் படியவரும் வண்டுகளை விலக்கிக் குடிப்பது மரபு. குடிப்பவர் செய்வதை அவளுக்குக் கொடுக்கும் பாங்கியே செய்தனள் என்பது தோன்ற "மட்டுத்தமனிய வள்ளத்தின்விட்டு.........காந்திமதிவதனி கைக் கொடுப்ப" என்றார். பேரிளம்பெண்ணாகிய தலைவியின்வினை மாந்துதல் ஒன்றேயாயிற்று. "மாந்தி" என்றார். மாந்தியவுடன் மயங்கினள் என்பது தோன்ற "குதலை குழறி" என்றார். கள்ளுண்டார் சொல் திருந்தாத சொல்லாகத்தோன்றும்; குயிற்குரல்போலவும், கிளிமொழி போலவும் இருந்தது இவள் பேசுவது; இவள் பேசுவது கண்டு குயிலும் கிளியும் நம்மைப்போலக் கூவுவது யார் என்று எண்ணி அவை நடுங்கின என்பது தோன்ற "விதலையுலகில் விளைத்து" என்றார். பகைகண்டு நடுங்குவதாகக்கொள்க. முத்துகள்போல வேர்வைத்துளிகள் நெற்றியில் இருப்பன முத்துமாலையால் நெற்றியையலங்கரித்தது போலத் தோன்றின. அலங்கரியா - அலங்கரித்து; செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம். அயரா - அயர்ந்து. வெளியிடா- வெளியிட்டு, பெயரா - பெயர்த்து. இவையும் அதுவே. அஞ்சா - அஞ்சாமல்; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சமாகக் கொள்க. அவன் கொடுமையை வெளியிடுவதற்கும் அஞ்சாமல் பெயர்வதற்கும் அஞ்சாமல் எனப் பொருள் கொள்ளவேண்டும். கட்குடியருக்கு அச்சந் தோன்றுவதின்று, அஞ்சி எனப் பொருள் கொள்ளிற் பொருந்தாது. வேந்தன் கொடுமையாவது தன்னைக் கனவில் வந்து புணர்ந்ததும், பின்வந்து தன்னைக் கூடாமலிருப்பதுவும் தான் காதல் கொள்வது கண்டும் அவன் காதல் கொள்ளாமையும் ஆம். இருந்தவிடத்தினின்று சிறிது பெயர்ந்து வேறிடத்தில் நின்று பாணனை நோக்கினாள். "நாம் எங்குச் செல்வோம்' என வினவுகின்றாள் என அந் நோக்கின் குறிப்பறிந்த பாணன் குலோத்துங்கன் பவனிவரும் ஆரவாரங் கேட்கிறது என்றான். அங்குச் செல்வோம் என்பது குறிப்பு. தமரம் - ஒலி. அது முரசு, சங்கு, சின்னம், இவற்றின் ஒலிகளையும் மக்கட் கூட்டத்தின் ஆரவாரத்தையும் உணர்த்தியது. |