வரிகள் 714 - 726 : ஞாலத்தோர் .............தோளும்பணைப்ப சொற்பொருள் : உலகத்தோர்கட்கெல்லாம் தெய்வமாக வந்த பெருமான் ஆகிய குலோத்துங்க சோழனும் தன் சேவடிக்கெதிரேத கைகுவித்து வணங்கிநிற்குங் காரிகையை நோக்கினான். அப்போது அப் பெண்ணானவள் முன்காலத்துச் சூரரஞ்சும்படி பொருது கொன்று வென்ற முருகனும் விரும்பும் இளம்பருவத்தையும், மார்பின் பெருமையையும், இரு புருவங்களையும் செந்தாமரை மலர்போன்ற விழிகளையும் பெரிய மேருமலையையும் பந்தாக எடுக்கும் வலிமைபெற்ற பருத்த தோள்களையும் உந்தியையும் உலகத்தார் பிழைக்கவருள் செய்கின்ற செவியையும், மூக்கினையும் சந்திரனை ஒளி மழுங்குமாறு செய்யும்படி ஒளிவீசும் புன்சிரிப்பின் நிலவையும், சிவந்த பவளம் போன்ற சிவந்த வாயையும், இருகால்களாகிய தாமரைமலர்களையும், கவளமுண்ணும் பட்டத்துயானைமேலிருக்க எளிமையாகக்கண்டு, கண்ட தன்னுடைய கரிய நீண்ட கண்கள் களிப்படையவும் மனம் மகிழ்ச்சியடையவும், பருத்து நீண்ட தோள்கள் விம்மவும் (நின்று) பலவாறு பேசுகின்றாள். விளக்கம் : ஞாலத்தோர் - உலகமக்கள். தெய்வப்பெருமாள் என்றது சோழன். திருமாலே வந்து பிறந்ததாக முன்னருங் கூறியது காண்க. சோழனெதிர் என்று கூறுவதைச் சேவடி முன் என்றார், கை குவிப்பது சேவடிக்கென்னுங் கருத்துத் தோன்ற. கை குவித்துவைத்து நின்றவளை என மாற்றுக. கை குவித்துவைத்தல்; வணக்கங்காட்டுதல். முருகள் இளமை; மாறாத இளமை. என்றும் இளமையாயிருக்கும் முருகனும் இவன் இளமையை விரும்புவான்; அத்தகைய இளமைப் பருவம் எனப் பருவத்தைச் சிறப்பித்தார், "மாமேருவைச் சிறிய பந்தாகக் கொள்ளும் பணைத்தோள்" என்றது தெய்வத்தன்மையும் வலிமையு முடையவை எனச் சிறப்பித்ததாம். உந்தி - கொப்பூழ். நகை - பல் எனவும் பொருள்படும். பற்களின் ஒளியெனக் கொள்க. முடிமுதல் அடிவரையுள்ள உறுப்புகளைக் கண்டனள் எனக் கொள்க. கண்டு களித்துத் தோள் விம்மத் தொழுது நின்றாள். நின்று காதல் கொண்டாள் என்பது குறிப்பு. அதனைப் பின்வருங் கூற்றினால் அறிக. |