பக்கம் எண் :

பக்கம் எண் :136

குலோத்துங்க சோழனுலா
 


 









750





 
ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன்
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர்
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த்
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின்
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சமத்துக்
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
வீதி விடைதடிய வேண்டவோ - யாதுகொல்
வன்பல் லவந்துகைத்த வாட்டானை யின்றிந்த
மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங்
 



 

வரி 742 - 758 : ஓவியசேரன்........மேம்பாடு

சொற்பொருள் : சோழ மன்னனே! நீ முன் ஒழித்த சேரனது வில்லினும் வலியதோ இம் மாரனது வில். அதனை வணக்கிய நீ இதனை வளைத்து ஒடியுமாறு செய்திலை; சேரன் முற்றத்து நின்ற பனைமரத்தினை வெட்டி வீழ்த்திய நீ இரவில் எம்மை ஒலியால் வருத்தும் அன்றிற் பறவை வாழும் பனையை வெட்டலாகாதோ; சினந்து போர் செய்த பாண்டியர் சேனைக் கடலைத் தொலைத்த நீ எம்மை வருத்தும் கடலைத் தொலைத்திலை; பகைவர் புகழாகிய நிலவைக்கெடுத்த நீ பகைவர்குல முதலாகிய சந்திரனது நிலவைக் கெடுத்திலை; பெரும் ஒலி நீர்க்கடலுள் வாழும் பகைவர் போரில் வீணைக்கொடியை ஒடித்த நீ எமது செவியைக் கவரும் எம்முன்னுள்ள வீணையை யொடித்திலை; ஒடித்தால் அஃது உன்னை என்னசெய்யும்?; சிங்கள நாட்டிற் சென்று செம்மணிப்பாவையின் சிவந்த ஒளியை மாற்றிய நீ எம்மை வருத்தும் செவ்வானத்தின் கொடிய ஒளியை மாற்றிலை; முற்காலத்தில் காடவனைப் போரில் வென்று அவன் கட்டிய விடைக்கொடியை வெட்டிய நீ வீதியில் வரும் விடையைவெட்ட வேண்டாவோ? வலிய பல்லவநாட்டினைத் தொலைத்த நின் வாளாயுதந்தாங்கிய படைகள் இப்போது இம்மெல்லிய பல்லவத்தைத் தொலைக்காத பெருமை யாதோ கூறுக என்றாள்.

விளக்கம் : மேம்பாடு யாதுகொல் என இறுதியுடன் கூட்டுக. ஈண்டுக் கூறப்பட்ட செயல்கள் இப் பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கனும் அவன் முன்னோர்களும் செய்தவை. சேரன்வில் என்றது, அவன் விற்கொடியை. அவனை வென்று அவன் விற்கொடியைப் பணியும்படி செய்தாய் என்பது. முன்றிற்பனை என்பது அவன் பனைமாலை புனைவதற்காக முற்றத்தில் வளர்த்த பனைமரத்தை. சேரளை வென்றபோது அவன் பனைமரமும் வெட்டப்பட்டது குறித்தது. செழியர் - பாண்டியர், படைக்கடல்; உருவகம், படைக்கடலை மாய்த்தாய் என்பது பாண்டியனைப் போரில் வென்றாய் என்ற குறிப்பு. மலைத்தவர் என்றது பிறநாட்டினரால் அவனோடு பகைத்த மன்னர்களை. மலைத்தவர் தங்களை என இரு சொல்லாகக் கொள்க. பகைத்தவரை என்பது பொருள். பகைத்தவர் தோற்றவுடன் அவர்கள் புகழ் மறைந்து வென்றவர்புகழ் விளக்கமுறுவதால் "புகழ்நிலவை மாய்த்தாய்" என்றாள். புகழ் நிலவு : உருவகம். அரி என்பது பலபொரு ளொருசொல். இங்குப் பகைவர் பாண்டியர் எனவும், அவர் மரபு பாண்டியர் குலம் எனவும், அக்குலத்திற்கு முதல் ஆன சந்திரன் எனவும்" அரமரபிற் றிங்கள்" என்பதற்குப் பொருள் கூறப்பட்டது. பொங்கொலி நீர் என்பது கடலையுணர்த்தியது. தெவ் + முனை - தெம்முனை - பகைவர்போல் இஃது இலங்கையை யாண்ட இராவணனைக் குறிப்பாலுணர்த்தியது. யாழ் - வீணை. இது வீணைக்கொடிக்கு ஆகுபெயர். யாழ் என்ற சொல் குறிப்பே இராவணனைக்காட்டியது, வீணைக்கொடியோன் அவனாதலின். இவ்வொருசெயல் மட்டும் திருமால் செயலைக் குறித்ததாம். சிங்கள நாட்டிற்சென்று அந்நாட்டரசனை வென்று அவன் மலையாகிய திரிகூடத்து மணிப்பாவையின் சிவந்த ஒளியை மறைத்தான் என்பது வரலாறு. அப் பாவை கொல்லிப்பாவைபோல ஆடவருயிரை உண்பது. இதனை "உயிர்ப்பாவை, கொல்லிக்குமுண்டுயி ருண்மைத்ரி கூடத்துச், சொல்லிக்கிடக்கும் துணைமணிக்கும்" (288 - 290) என்பதனாலும், "ரத்ன மேவிய கூடமெல்லாம்திரி கூடத்தின் மேற்படுமே" (தமிழ்நா. 249) என்பதனாலும் அறியலாம். பண்டு காடவன் வெஞ்சமத்துக் காதிவிடை முன் தடிந்தாய் என மாற்றிக்கொள்க. முன் காடவனைப் போரில் மோதி வென்று அவன் விடைக்கொடியை வெட்டினாய் என்பது பொருள். விடை : ஆகுபெயர்; கொடியையுணர்த்தியதால்
காதல்கொண்ட மாதருக்கு மாரனும், அன்றிலும் கடலொலியும், நிலவொளியும் வீணையிசையும் மாலைக்காலத்துச் செவ்வானமும் விடையின் கழுத்திற்கட்டிய மணியொலியும் பகையாம். ஆதலால் இவற்றையெல்லாம் தொலைக்க வேண்டும் என வேண்டினாள். எனவே காதல்கொண்ட என்போன்ற மாதரையெல்லாம் கூடியின்பம் தருவார்க்கு அதுவே அறமாகும் என்று கூறினாள்; காதல்கொண்ட கன்னியர்க்குப் பகையும் அவர் செயலும் இரத்தினச் சுருக்கம் என்ற நூலில் "முத்துங்களப முந் தண்பனி நீரு முயங்குமலர்த், தொத்துங் கதலியுமாலியுங் கங்குலுமிப், பத்தும் பெரும்பகை யாய்விட்ட வாமொரு பைந்தொடிக்கே" எனவும், "தொடியும் பலகலனும் தூய்க்கச்சு முத்தும், கடிகமழ்தா ரும்புனையாள் கால - விடமனைய, சேல்விழிக்கு மையுந் திலகநுதற் குங்குறியாள், சாலமுடி யாளளகம் தான்," எனவும், "தானே கமழ்கமனை தண்சுனைநீ ராடாள்,

கானே ரிசைபயிலாள், கந்துகமு - மானினமும், பூவையையும் போற்றாள் பொருந்தவே பாங்கியருக், கேவல்புரி யாள்களிப்ப தென்று" எனவும், "தென்றற்கும் வீணைக்கும் சேமணிக்குங் கோகிலத்துக் கன்றிற் கமைக்காழிக் கம்புலிக்கு - நின்றரற்று, மன்னைக்கு மாரற் கயர்ந்தாளென் றன்னமே, யென்னைக் குமாரற் கியம்பு" எனவும் வருவனற்றால் அறிக. இவற்றுள் மாரற்கு, அன்றிற்கு, கத்துங்கடலும், அம்புலிக்கு, வீணைக்கும், கங்குலும், சேமணிக்கும் என வந்திருப்பன ஆய்க. அம்புலி - சந்திரன். கங்குல் - இரவு. மாலையும் - அதனுடன் சேர்ந்ததுதான் - சேமணி - காளைமாட்டின் கழுத்துமணி.