பக்கம் எண் :

பக்கம் எண் :137

குலோத்துங்க சோழனுலா
 


 



760









770
மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங்
கருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
கருப்புநாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ்
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப
வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா
உடல்பிள வோட வொருதேரிட் டூரும்
கடன்மகர போசன மாக்கும் - விடுதூதால்
அக்கால தண்டமகற்றி யுலகளித்தாய்
இக்காம தண்ட மெளிதன்றே - மைக்கோல
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில்
எப்படி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே
தையலார் பொற்றோகைச் சாயலார் கையகலா
மையலார் பேரலராய் மன்றேற - வையம்
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
ஒருகுடையான் போந்தா னுலா.



 

வரிகள் 758 - 774 : தன்பூங்கருப்புச் .............போந்தானுலா

சொற்பொருள் : மன்மதன் தனது அழகிய கரும்புவில்லைக் கொண்டு எமது கழுத்திற் புடைக்கின்றான்; வண்டாகிய கயிற்றையும் கழுத்தில் இறுகக்கட்டி அழுந்தத் தூக்குகின்றான்; தீயைக்கக்கும் அம்புகளாகிய கழுவில் எம்மை ஏற்றுகின்றான்; ஆறாத பெருங்கோபமாகிய தீயிற்போட்டு எமது உடம்பை உருக்கின்றான்; தப்பாமல் எம்முடல் பிளக்கும்படி அவன் தேரினை எம்மேற் செலுத்துகின்றான் : அவன் வெற்றிக்கொடியாகிய மகரமீனுக்கு எம்மை உணவாகக் கொடுக்கிறான். இவ்வாறு காமன்செய்ய நீ கண்கொண்டு நோக்குவது அறமாமோ? முன் ஒரு தூதுவனை விடுத்து அந்தக் காலன் தண்டிக்குஞ் செயலை நின்னாட்டிலின்றி யொழித்தாய். இக் காமன் செய்யும் தண்டனை அதற்கு எளிதல்லவே! கரிய மேகநிறத்திருமாலே! கடலிற் கண்வளர் செயல் மறந்து பிறந்த கண்ணனே! மன்மதன் போரின்னின்றும் நீ காவாயேல் இளம்பெண்யானை போன்ற மங்கையர் எவ்வாறு உயிர்பிழைப்பார் என்று பலவாறு கூறிமையணிந்த கண்ணுைடைய அப் பேரிளம்பெண் வருந்தினாள். இவ்வாறே பேதை முதலிய ஏழ் பருவப்பெண்கள் அழகிய மயில் போன்ற சாயலையுடையார் பலரும் நீங்காத மையலுடை மலராகப் பெரும்பழிச் சொற்கூறி மன்றத்திற்சென்று நிற்குமாறு பெருகிய எழுகடல்களையும் உடையாகக்கொண்ட பூமியாகிய ஏழுலகத்தையும் புரக்கும் ஒரு வெண்கொற்றக்குடையுடைய குலோத்துங்க சோழன் உலா வந்தான் என்க.

விளக்கம் : கரும்பு - கருப்பு. சுரும்பு - சுருப்பு என வன்றொடர்க் குற்றியலுகரமாய் மாறின. சுரும்பு - வண்டு. இது காமனுக்கு விற்கயிறு. கரும்பு வில்லைக் கொண்டு மோதும் என்றதும் கழுத்திற்.......அழுந்தத் தூங்கும் என்றதும் விற்கழுந்துகொண்டு அடிப்பதும் கழுத்திற் கயிறுபூட்டிக் கட்டித் தூக்குவதும் போன்ற துயர் செய்கின்றான் என்ற கருத்தைத் தருவன. தூக்கும் என்பது தூங்கும் என மெலித்தலாயிற்று. அப்பு - அம்பு. காமன் அம்பு மலர். மலர்மேற்படுப்பது கழுவேற்றுவதுபோலத் துன்பத்தைக் காட்டுகிறது. நெருப்பு உமிழ் அப்பு என அம்பின் கொடுந்தன்மை கூறினர். கோப வெப்பு - சினத்தீ. வெப்பு என்றது, ஆகுபெயராய்த் தீயையுணர்த்தியது. படுத்து - போட்டு, பொன்னைத் தீயிற்போட்டு உருக்குவதுபோலக் காமன் தன் சினத்தீயிற்போட்டு எம் பொன் போன்ற மேனியை வாட்டுகிறான் என விளக்கம் கொள்க. மன் மதனுக்குத் தேர் தென்றற்காற்று. தென்றல் காதல் கொண்டார்க்குப் பகைப்பொருள், அது மெய்யில் வீசும்போது உயிர்விடும்போது நிகழ் துன்பம் உண்டாம். என்பது "தென்றற்புலியேயிரை தேடுதியோ" (கம்ப. 1. கடிமணப் 7) எனவும், "மலரமளித் துயிலாற்றாள் வருந்தென்றன் மருங்காற்றாள்" (பெரியபுரா. தடுத்தாட். 174) எனவும் வருவனவற்றால் உணர்க.


 

     ஒருவருடலத்தைப் பூமியிற் கிடத்தி அவ்வுடலம் பிளக்கும் படி அதன்மேல் ஒரு தேரினையுருட்டினால் எவ்வாறு அவர் வருந்துவரோ அவ்வாறு வருந்தும்படி காமன் அவன் தேரினை எம்முடல்மீது ஒட்டுகிறான் என்று கருத்துத் தோன்ற "உடல் பிளவோட ஒரு தோட்டூரும்" என்றார். போசனம் - உணவு, இது வடமொழி. மகரம் - சுறாமீன்; மகரமீன்வாயில் மக்களகப்பட்டால் எத்துணைத் துன்ப முண்டாமோ அத்துணைத்துன்பம் அவன் மீனக்கொடியால் எமக்கு விளைகிறது. மீனக்கொடி கண்டாலே யச்சந் தோன்றுகிறது என்பது. சுரகுரு என்ற சோழன காலனுக்குத் தூதுவிடுத்தான் என்றும், அத்தூதுவன் சொற்கேட்டுக் காலன் சோழநாட்டு மக்களுயிர்களைக் கொண்டுபோகாது விடுத்தான் என்றும், அதனால் காலதண்டனையினின்று மக்களுயிரைக் காப்பாற்றியவன் சுரகுரு என்றும் அறிகின்றோம். இதற்கு (20 - 30 விளக்கம் காண்க) இவன் முன்னோரிலொருவன் செய்த செயலை இவன் செய்ததாகக் கூறியது "அக்கால தண்டம் அகரறியுலகளித்தாய்" என்பது. இக் காமதண்டமும் காலதண்டமும் ஒன்றே அதனின் வேறன்று என்பாள் "எளிதன்றோ" என்றாள். மகராலயம் - கடல் மகரமீனுக்குக் கோயில்போல அமைந்தது. மகரம் - ஆலயம். "மகரத்தெய்வம் நாணிறைந்துறைய, மணிவிளக்கு நிறைந்த வாலயமாகி" கல்லாடம் (23 - 27 29) என்பதை நோக்குக. "மகராலய மறந்த கண்ணன்" என்றது திருப்பாற்கடலி னறிதுயில் செய்வதை மறந்துவந்து சோழனாகப் பிறந்தவன் என்பதைக் காட்டியது; மகளிர் மென்மை தோன்ற இளம்பிடியாவார் என்றும் மன்னனாகிய நீ அவரைக் காவாயேல் மகளிர் குலம் மாய்ந்தொழியும் என்பாள் "எப்படியாவார்" என்றும் கூறினாள். என்று என்று கூறிய அடுக்குப் பல முறை இவ்வாறு கூறினாள் என்பதைக் காட்டியது. பொன் + தோகை - அழகிய மயில். சாயலார் - மகளிர். மயிற்சாயல் போன்ற சாயலுடையார் என்க. கையகலா - விட்டு நீங்காத. மையலார் : குறிப்பு வினைமுற்று எச்சப்பொருள் பட்டது. பேர் அலர் - மிகுந்த பழிச்சொல். அலராய் - அலர் கூறியவராக. மன்றுஏற - அம்பலங்களிலேறி நாணமின்றி நிற்க. பெருகுநீர் ஏழும் உடையாம் வையம்பார் ஏழும் என மாற்றுக. பேணும் - அரசுசெய்யும் ஒரு குடையான் உலாப் போந்தான் எனக் கூட்டுக. இவ்வாறு பேதை முதலிய ஏழு பருவப்பெண்களும் தத்தம் செயல் மறந்து காதல் கொண்டு பலவாறு கூறிநிற்க, குலோத்துங்க சோழன் யானைமேல் உலா வந்தான் என்பது முடிவு.