பக்கம் எண் :

பக்கம் எண் :138

இராசராச சோழனுலா
 


 

1


3


5


7
புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும்

காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஒட்டி

அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப்

பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால்


 

வரிகள் 1 - 10 : புயல்வண்ணன் .............ஊட்டினோன்

சொற்பொருள் : மேகம் போன்ற கரிய நிறத்தையுடைய திருமாலின் உந்தியாகிய அழகிய தாமரை மலரிலமர்ந்து உலகம் படைக்குஞ் செயலின் தன்மையைக் காட்டிய மைந்தனாகிய பிரமன் படைத்த உயிர் முழுவதையும் காட்டிய பதின்மரில் ஒருவனாகிய காசிபன் படைத்த ஏழு புரவிகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர்மேல் வருபவனாகிய சூரியன், அவன் வழித் தோன்றியவனாகிய அறச்சக்கரத்தைச் செலுத்தித் தன் மைந்தன் மேல் தேர்ச் சக்கரத்தைச் செலுத்திய மனுவும், புறக்கடல் வரையுள்ள பூமியைப் புரந்தவனும், ஒரு மறையோனுக்குத் திருமகளையும் பூமி தேவியையும் சொற்குற்றம் வருமெனப் பயந்து வழங்கியவனும், பொய்கையிற் புகுந்து நீர்த்துறையில் பகையாகிய புலியும் புல்வாயும் ஒற்றுமையாய் நீர் குடிக்கும்படி செய்தவனும்.


விளக்கம் : புயல் என்பது மங்கலச் சொல்லாதலின் முன் வைக்கப்பட்டது. பொன்பதுமப் போது - அழகிய தாமரைமலர். இது குறிப்பால் உந்தித் தாமரை மலரையுணர்த்தியது புவனச் செயல் வண்ணம் - புவனத்தைப் படைக்கும் திறம். சேய் - மைந்தன். இஃது ஆன் விகுதி புணர்ந்து பின்னர்ச் செய்யுளில் ஆ ஓ வாக மாறிச் சேயோன் என நின்றது. திருமால் திருப்பாற் கடலிற் படுத்து அறிதுயில் கொள்ளும்போது உந்தியின் முளைத்துத் தாமரை மலர்ந்தது எனவும் அம் மலரிற் பிரமன்றோன்றி உலகத்தைப் படைத்தனன் எனவும் நூல்கள் கூறும். ஆதலாற் சேயோன் பிரமன் எனக்கொள்க. பதின்மர் - பத்து முனிவர்களை. அம் முனிவர்களில் ஒருவன் காசிபன்; அவனாற் படைக்கப்பட்டவன் சூரியன். ஏழ்புரவி, தனியாழி என்ற குறிப்பினால் பொற்றேரோன் சூரியன் எனப் பொருள் தந்தது. அறவாழி ஒட்டி என மாற்றுக : அறம் + ஆழி = நெறிச் சக்கரம். செங்கோல் செலுத்தி என்க. நெறிமுறை வழுவாது தன் மகனைத் தேர்ச் சக்கரத்தாற் சிதைத்துக் கொன்றதற்கு இயைய அவனைத் தேர்க் காலிற்கிடத்திக் கொன்றதை யுணர்த்தியது. "அவனி புறவாழி முட்டப் புரந்தோன்" என்பது எவனைக் குறித்ததோ அறிதற்கு வழியின்று. திலீபன் என்பர் என்பது உ. வே. சா. அவர்கள் குறிப்புரை. மறையோர்க்கு - கோசிக முனிவனுக்கு. நல்கினோன் - அரிச்சந்தின். பூவிற்கிழத்தி - திருமகள். இது செல்வ முழுவதையும் உணர்த்தியது. பூமிக்கிழத்தி - நிலமகள். இஃது அரசாட்சியை யுணர்த்தியது. நாவிற் பழுது - சொற்குற்றம். "காக்கின்ற, மண்ணைவேண்டினும் வாழ்வுடனீகுவன்" என்று கூறிய சொல். பொய்யாகும் என்று கருதிச் செல்வம் அரசு முதலிய எல்லாம் முனிவனுக்குக் கொடுத்தான் என்பது வரலாறு ஆதலின். நா: ஆகுபெயர்; சொல்லை யுணர்த்துதலால் புலியும் புல்வாயும் ஒரு துறையில் நீர் குடிக்குமாறு அரசு புரிந்தோன் மாந்தாதா என்பவன். சேயோன், அவன் படைத்த காசிபன் அவன் படைத்த பொற்றேரோன் அவன் வழித்தோன்றிய மனுவும் திலீபனும் அரிச்சந்திரனும் மாந்தாதாவும் என முறைப்படுத்துக. இது பின் வரி 57இல் "ஆயபெயர் கொண்டகிலாண்டமும் புரந்து" என்பதில் இயைத்துக் கொள்க.