பக்கம் எண் :

பக்கம் எண் :139

இராசராச சோழனுலா
 


 

11












20
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்
புறாநிறை புக்க புகழோன் - அறாநீர்த்

தரங்கக் கடலேழுந் தன்பெயரே யாகத்
துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள்

சுரநதி தன்பெய ராகச் சுருதி
வரநதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்

மல்லன் மரபை ரகுவின் மரபென்று
சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால்

வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய
இந்திரனை யேறாக்கி யேறினோன் - முந்தும்


 

வரிகள் 11 - 20 : புக்கால் .............ஏறினோன்

சொற்பொருள் : சரண் புகுந்தால் இவ்வரசன் மறுத்துத் தள்ளிவிடான் என்று கருதிச் சரணடைந்த வஞ்சகப் புறாவிற்காக நிறைகோலில் ஏறி நின்ற புகழ் பெற்றவனும், நீர்வற்றாத அலைகளையுடைய ஏழு கடல்களும் தன் பெயர் பெறும்படி வேள்வியின் பொருட்டு வைத்திருந்த குதிரையாகிய உயிர்ப் பொருளைத் தேடிப் பூமியைத் தோண்டியவனும், மேன்மை பொருந்திய கங்கை யாற்றுக்குத் தன் பெயரமையும்படி வேத முனிவனாகிய கபிலன் தந்த பெருஞ்சாபத்தைத் தொலைத்தவனும், வளம்பொருந்திய இம் மன்னர் குலத்தை ரகுகுலம் என்று யாவரும் கூறுமாறு பெரும் புகழுடன் உலகத்தைப் புரந்த பழைமையுடையவனும், துன்பத்தால் வந்து வேண்டிய தேவர் பொருட்டு வானுலகஞ் சென்று அசுரர் போர் தொலைப்பதற்கு இந்திரனை விடையூர்தியாக்கி யேறியவனும்.


விளக்கம் : இறைமறான் எனக் கூட்டி மன்னன் மறுக்கமாட்டான் என்று பொருள் காண்க. சரண் - அடைக்கலம் புகுதல். தீத்தெய்வமும், யமனும், புறாவும், வேடனுமாக மாற்றுருவங்கொண்டு வந்தனராதலின் "வஞ்சப்புறா" என்றார். நிறை - துலாக்கோல்; தராசு. வேடன் புறவின் நிறையளவு ஊனை நின்னுடலிலிருந்து அறுத்துக் கொடு என்று கேட்க அதற்குடன்பட்டுத் தசையை யரிந்து வைக்க வைக்க வஞ்சகப் புறாவின் நிறை சமனாகாதது கண்டு தானே ஏறினான் சிபி என்பது வரலாறு. பருந்து புறாவைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர். இவன் பெயர் சிபி என்பது. இச் செயல் "புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" (சிலப். 20, 52) எனவும், "புறவினல்லல் சொலியக் கறையடி, யானை வெண்மருப்பெறிந்த வெண்கடைக், கோனிறை துலாஅம் புக்கோன் மருக" (புறநா. 39) எனவும், "புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை" (கம்ப. 1. திருவவ. 65) எனவும் வருவன காண்க. கடல் தன் பெயராகத் தொட்டோர் சகரர். இவர் தோண்டியதனால் சாகரம் என்று கடலுக்குப் பெயர் வந்தது. "சகரர் தொட்டலாற் சாகரமெனப் பெயர் தழைப்ப, மகரவாரிதி சிறந்தது" (கம். 1 : அகலிகை. 43) எனக் கூறியது காண்க. சகரன் என்ற மன்னன் அசுவமேதயாகம் புரியத் தொடங்கித் தன் குதிரையை எட்டுத்திக்கினும் உலவி வரவிட்டபோது அக் குதிரையை இந்திரன் பிடித்துப் பாதலத்திற் கொண்டுபோய்க் கபில முனிவர் குடிலின் பின் கட்டி வைத்தான். சகரன் மக்கள் அறுபதினாயிரம்பேரும் குதிரையைத் தேடி மண்ணுலகத்தைத் தோண்டி மண்ணையுண்டு பாதலத்திலிறங்கிக் கண்டுபிடித்தனர். கபில முனிவர் தவங் கலைந்து கண் விழித்தவுடன் அறுபதினாயிர வரும் வெந்து சாம்பலாயினர் என்பது வரலாறு. மக்கள் தோண்டினர் ஆயினும் சகரன் ஆணையால் அவர் செய்தனர் என்பது குறித்துத் தொட்டோன் என அவன் செயலாக்கினர். "தோட்டுநுங்கினர் புவியினைப் பாதலந் தோன்ற" (கம்ப. 1 : அகலிகைப். 37) என்பதும் காண்க. துரங்கப்பசு என்பது குதிரையாகிய உயிர் எனப் பொருள்பட்டது. வேள்விக்குரிய உயிர்களை பசு வென்றல் மரபு. சுருதி - வேதம். வரன் - மேலோன், மேன்மையுடையவன். கபிலமுனிவனை யுணர்த்தியது குறிப்பினால். அதிசாபம் - மிகுந்த சாபம்; உயர்ந்த சாபம். அறுபதினாயிரவரையும் எரித்த காரணத்தால் உயர்ந்தது என்பது கருத்து. அச் சாபத்தை மாய்த்தவன் பகீரதன். மாய்த்தல் வெந்தவர்களையெழுப்பி விண்ணுலகஞ் செல்வித்தது. அறுபதினாயிரஞ் சகரர்களும் கபில முனிவர் சாபத் தீயால் வெந்து நரகிற் கிடக்கின்றனர் எனத் தன் மூதாதையர் வரலாற்றையறிந்த பகீரதன், பல ஆண்டுகள் தவம் புரிந்து கங்கையை வருவித்துப் பாதலங் கொண்டு போய்ச் சகரருடற் சாம்பலை நனைவித்து மேலுலகம் புகுமாறு செய்தனன் என்பது வரலாறு. சுரநதி - கங்கை. தன் பெயரேயாக என்பது கங்கைக்குப் பெயர் பகீரதி, பாகீரதி என்று வழங்குவது. பகீரதனாற் கொண்டுவரப்பட்டதாற் பகீரதி என்று பெயராயிற்று. பாகீரதி என்பதும் அது. மல்லல் - வளம்; செல்வம். மரபு - குலம். "ரகுவம்சம்" என்று இக் குலத்திற்குப் பெயர் வழங்குவதைக் குறித்தது. ஒருவன் மிகவும் உயர்ந்தவனாக ஒரு குலத்திற் பிறந்து வளர்ந்து புகழ் பெற்றால் அவன் பெயராலேயே அக் குலத்தைச் சுட்டுவது உலக வழக்கம். எனவே ரகு என்ற அரசன் புகழ்பட வாழ்ந்தவன் என்பது. இந்திரனை விடையாக்கி ஊர்தியாக கொண்டவன் ககுத்தன். காகுத்தன் என இராமனுக்குப் பெயர் வழங்குவதும் இக்காரணம் பற்றியே. இந்திரன் ககுத்தன்பால் வந்து தன் பகையைத் தொலைக்க வேண்டும் என்று குறையிரப்ப அதற்குடன்பட்டு வானுலகு சென்று அசுரருடன் போர்புரிந்து அவரையழித்து வென்று வந்தான் என்பது இவன் வரலாறு. போர் புரியும்போது இந்திரன் விடையுருவமாய்த் தாங்கி நின்றான் என்பது "தான்றனக்கு வெலற்கரிய தானவரைத் தலைதுமித்தென், வான்றரக்கிற்றி கொலென்று குறையிரப்ப வரங் கொடுத்தாங், கேன்றெடுத்த சிலையினனா யிகல் புரிந்த விவர் குலத்தோர், தோன்றலைப் பண்டிந்திரன்காண் விடையேறாய்ச் சுமந்தானும்" (கம்ப. 1 : குலமுறை. 3) காண்க. குலோத். உலா. 5, 6. கலிங்கத். 1881 இவ்வரலாறு வருவதுங் காண்க. சிபி, சகரன், பகீரதன், ரகு, ககுத்தன் என்ற ஐவரையும் இங்குக் கூறினர்.