பக்கம் எண் :

பக்கம் எண் :140

இராசராச சோழனுலா
 


 

20














30
இந்திரனை யேறாக்கி யேறினோன் - முந்தும்

ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது

சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே

வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத்
தூங்கு புரிசை துணித்தகோன் - வீங்கு

குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும்
வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - முடுகிக்

கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின்



 

வரிகள் 20 - 30 : முந்தும் .............மன்னர்க்கு மன்னன்

சொற்பொருள் : வானுலகிலிருந்து வந்த தேராகிய ஒரு தேரால் பத்துத் தேரினையும் துரத்தி வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அசுரனைத் தொலைத்தவனும், வில்லால் வழிபட்டு வணங்கிய கடலினை முற்காலத்தில் மலைகளால் வழியுண்டாகும்படி செய்தவனும், நிலை நில்லாமல் அழியும்படி எடுத்த சிறந்த ஒரு வாளாயுதத்தின் வாயிற் படுமாறு அசையும் கோட்டையைத் துண்டாக்கியழித்த மன்னவனும், பெருகிய மேல்கடற்குக் கீழ்கடல் சார்பாகுமாறு செய்த வடகடலுக்கும் தென்கடலுக்கும் மன்னனும் விரைவாகிச் சென்று கரையைத் தொலைக்குங் காவிரியாறானது ஏழு கடனீரினும் கலக்குமாறு நடுவில் உள்ள மலைகளையெல்லாம் வெட்டிய மன்னர்க்கு மன்னனும்.


விளக்கம் : உம்பர் வருதேர் ஒரு தேரால் எனக்கூட்டி வருதேராகிய ஒரு தேரினால் எனப் பொருள் காண்க. ஐயிரண்டு தேர் - பத்துத்தேர். சம்பரன் என்ற அசுரன் பத்துத் தேருடையவன். ஒரு தேராற் பத்துத் தேரினையும் ஓட்டிப் பகையை மாய்த்தோன் எனக்கூட்டுக. இவன் தசரதன், பத்துத்தேர்களையும் வென்றதனால் வந்த பெயர் இது. தசம் - பத்து. ரதன் - தேரினை வென்றவன். சிலையால் வழிபடு தெண்டிரை என்றது இராமன் சிலைவளைத்து அம்பு தொடுத்துக் கடல்நீரை வற்றச் செய்தது கண்டு அஞ்சி வந்து வருணன் வணங்கியதைக் குறிப்பாலுணர்த்தியது. தெண்டிரை - கடல். இஃது அதற்குரிய தெய்வமாகிய வருணனைக் குறித்தது. சிலை என்றது : அதன் வலிமையையுணர்த்தியது. இராமன் வில் வலிமையாற் கடல் வற்றியதுகண்டு வருணன் வழிபட்டான் என்பது குறிப்பு. மலையால் வழிபட - மலைகளைக் கொண்டு போட்டதனால் வழியுண்டாக; இது கடலிற் கரைகட்டி இலங்கைக்கு வழியுண்டாக்கியதை யுணர்த்தும். வைத்தோன் - செய்தோன் எனப் பொருள் பட்டது. இராமனைக் குறிக்கும். புரிசை - கோட்டை. துணித்தகோலன் - தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன் என்ற சோழன், இவனுடைய இயற்பெயர் தோன்றவில்லை. வடகடற்குந் தென்கடற்கு மன்னன், என்றது வடக்குக் கடலுக்கும் தெற்குக் கடலுக்கும் இடையிலுள்ள மாநிலங்களை யெல்லாம் தனக்குள் அடக்கியாண்டவன் என அவன் பெருமை தோற்றுவித்ததாம். குடக்கு + கடல் = குடகடல் - மேல் கடல். குணக்கு - கிழக்கு. மேல்கடலைக் கீழ்கடலாக்கியவன். மேல் கடனீரும், கீழ்கடனீரும் ஒன்றாகக் கலக்குமாறு செய்தவன் எனக்கொள்க. இவன்பெயர் (சம்கர்ஷண) சங்கரண சக்கரவர்த்தி எனவும் "சமுத்திரசித்" எனவும் கூறுவர். இவன் கப்பல் போக்குவரவு கருதி நடுவில் இருந்த நிலத்தை வெட்டி மேல் கடனீரையும் கீழ் கடனீரையும் ஒன்றாக்கினான் என்பது "புணரியொன்றினிடை யொன்றுபுக விட்டவவனும்" (கலிங்கத்துப். 193) எனவும், "மேல் கடல் கீழ்கடற்கு விட்டகோன்" (குலோத். உலா 28) எனவும் "மேல் கடலில், வீங்குநீர் கீழ்கடலில் விட்டோனும்" (விக்கிரம. உலா. 18, 19) எனவும் வருவனவற்றால் அறியலாம்.

      வரை யெறிந்த மன்னர்க்கு மன்னன் என்பது சிவூகன் என்பது டாக்டர் உ. வே. சா. அவர்கள் குறிப்பு. இவனைக் காவிரிச் சோழன் என்று சோழராச சரித்திரமும், கவேரன் என்று சிலப்பதிகாரமும், காந்தமன் என்று மணிமேகலையும் சித்திராதன் என்று திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயமுங் கூறும். இச் செயல் குலோத். உலா 29, 30, விக்கிரம உலா 23, 24, கலிங்கத்துப். இராசபா. 15 இவற்றிலும் வந்துள்ளது. தசரதன், அவன் மகன் இராமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், சங்கரண சக்கரவர்த்தி, சிவூகன் என்ற ஐவரும் ஈங்குக் கூறப்பட்டவர்.