வரிகள் 30 - 40 : தரையின் .............திறைகொண்டு மீண்டகோன் சொற்பொருள் : பூமியில் வாழும் பெருமைபெற்ற ஒரு பெண்ணை மணந்தபின்பும் ஆதிசேடனுடைய சிறந்த மகளை (நாகர்கன்னியை)த் திருமணம் புரிந்தவனும் அயனாட்டு மன்னர்தம் கல்லாகிய மலைபோன்ற மார்பினும் தெய்வத் தன்மை வாய்ந்த வடக்கின்கண்ணுள்ள மேருமலையினும் புலிக்கொடியை எழுதுவித்தவனும், சொல்லைத் தொடுக்கின்ற அந்த நல்லவராகிய பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் நூலின் பொருட்டுச் சேர மன்னனுடைய கால் விலங்கினை வெட்டிவிட்ட (சிறைநீக்கிய) மன்னனும், பகைவராகிய கூட்டம் உடைந்தோடுமாறு போர்புரிந்து தன்னுடம்பில் தொண்ணூற்றாறு தழும்பு கொண்ட சிறந்த வீரமுள்ளவனும், எழுந்த ஒரு பகற்பொழுதில் ஈழநாடு எழுநூற்றுக்காத வழியுஞ்சென்று போர் புரிந்து வென்று யானைகளைத் திறையாகக் கொண்டு மீண்ட வேந்தனும். விளக்கம் : நாகர் கன்னியைத் திருமணம் புரிந்தோன் சூரயாதித்த சோழன் என்பர் டாக்டர். உ. வே. சா. அவர்கள். சூரவாதித்த சோழன் என்பவன் நாகருலகஞ்சென்று நாகர் கன்னியாகிய காந்திமதியை மணந்து அங்கிருந்து வெற்றிலைக் கொடியைச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தனன் எனவும், இவ் வரலாறு செவ்வந்திப் புராணம், உறையூர்ப் புராணம் இவற்றுட் கூறப்பட்டுள்ளது எனவும் நாகவல்லி என வெற்றிலைக்குப் பெயர் வடமொழியில் இருப்பது சான்றாம் எனவும் கூறுவர் அவர். மணிமேகலை காதை 24. வரி 29 முதல் 59 வரை கூறிய நெடுமுடிக்கிள்ளி வரலாறும் நாககன்னியை அவன் மணந்ததாகக் கூறுகின்றது. பெரும் பாணாற்றுப்படை 29 - 37 வரிகட்கு நச்சினார்க்கினியர் விளக்கிய வரலாறும் நெடுமுடிக்கிள்ளியின் வரலாறுபோலவே தோன்றுகின்றது. கல் + மலை, கன்மலை எனத் திரிந்தது. கல்லோடு மலையும் மார்பும் எனவும் கூறலாம். மலை என்பதை உவமையுருபாக்கிக் கற் போன்ற மார்பு எனவும் கொள்ளலாம். மார்பிற் புலி பொறித்தலாவது சிற்றரசர் பேரரசர்களுக்குப் பணிந்து நடப்பதைக் குறிப்பதற்காகப் பேரரசர் கொடி முதலிய சின்னங்களைச் சிற்றரசர் தம் மார்பில் எழுதிக்கொள்வது, இது மரபு. "இடுகொடியணிந்த மார்பர்" (சீவகசிந். 2145); "மீளிவன் கொடிவிடை வேந்தர் மார்பினும், தோளினுந் தீட்டிய தொண்டை மன்னவா" (சாஸனப் பாடல்); "தாருமுடியு முரசுந் தமக்குரிய; பாரு முடன் பெறுவர் பார்வேந்தர் - வீரப், பெருமான் மகதேசன் பேரெழுதித் தத்தந், திருமார்பி லாளோலை செய்து"; "பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம் ‘மார்பகலங்கண்டு மகிழ்வரே - போர்புரிய, வல்லா னகளங்கன் வாணன்றி நாம, மெல்லா மெழுதலா மென்று"; "மேவலர் மார்பினுந் திண்டோ ளினுஞ்செம்பொன் மேருவினும் சேவெழுதும் பெருமாள்" (பெருந்தொகை 1158, 1182, 1205); "சென்னி திருமார்பிற் சேல்தீட்டினான்" (புதுக்கோட்டைச் சாஸனப் பாடல்) இவற்றால் இம் மரபினை யுணர்க. "பொன்னிமயக்கோட்டுப் புலி பொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன்' (சிலப்பதி. ஆய்ச்சியர். உள்வரி 2) எனவருவது மேருவிற் புலிபொறித்ததை யுணர்த்தியது. புலிக்கொடியை எழுதிப் பதித்தல் அதனைத் தனக்கு எல்லையாகக் காட்டுதல் : இமயம் வரையும் தன் ஆட்சி என்பது குறிப்பு. இது செய்தோள் கரிகாலன் என்பர். சொல்மலைய - சொற் கூட்டங்களையுடைய எனப் பொருள் கூறலும் ஆம். வில்லவன் - சேரன். விற் கொடியையுடையவன், விற்கொடி சேரமன்னர்க்குரியது ஆதலின். இவ்வரலாறு "மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத்தளைவிட்ட பார்த்திபனும்" (விக் - உலா 27, 28) எனவும் "அணங்குபடுத்தும் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (குலோத். உலா 38 - 40) எனவும் இவ்வாசிரியர் கூறுவதால் அறிக. அன்றியும் களவழி நாற்பது முன்னுரையில் "சோழன்செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையும் தமது திருப்பெயர் பொறித்துப் பொருதுழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிச் சோழன் செங்கணான் சிறை வைத்துழிக் களம்பாடிப் பொய்கையார் வீடுகொண்டமையான் என்க" என வரைந்திருப்பதும் புறநானூற்றுப் பாடல் 74 இன் அடிக்குறிப்பும் இதனையுணர்த்தும். இவன் செங்கணான் சோழன். இவன் கழுமலம் என்ற ஊரில் சேரமான் கணைக்காலிரும் பொறையோடு போர் புரிந்து வென்று அவனைச் சிறைப்படுத்தினன். இதனையறிந்து அச் சேரமான் அவைக்களப் புலவராகிய பொய்கையார் என்ற புலவர் களவழி நாற்பது என்ற நூல் பாடி அரங்கேற்றினர். அதற்குப் பரிசில் வேண்டாமல் சேர மன்னனைச் சிறை விடுதலே பரிசு என வேண்டினர். கோங்செங்கணான் மனமகிழ்ந்து சிறை வீடு செய்தான் என்பது வரலாறு. தொழும்பு - தொழுதி; கூட்டம். உடைய - புறங்காட்டியோட. தொழும்பு - தொண்டர் என்று பொருள் கொண்டு சிற்றரசர் எனக் கொள்ளலுமாம். சண்டப் பிரசண்டன் : வடமொழித் தொடர். மிகுந்த விரைவில் வெல்ல வல்லவன் என்பது பொருள். தொண்ணூற்றாறு புண் கொண்டவன் விசயாலய சோழன். விக்கிர - உலா 29, 30, குலோத் உலா. 41, 42 இச் செயலையே கூறும். ஒருநாளில் ஈழம் எழுநூற்றுக்காத வழியையும் போர்புரிந்து வென்று கொண்டான் என்பதும், பின்னர் யானைகளைத் திறைப் பொருளாக ஈழமன்னன் கொடுக்க உடன்பட்டு வாங்கி மீண்டனன் என்பதும் தெரிந்தது. ஈழத்து யானை சிறந்தது எனக் கொண்டனன். "கொங்கருடல் கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து, வெங்கணழில் வெதுப்புமே - மங்கையர்கண், சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத்தோண் மீனவனுக் கீழத்தானிட்டவிறை" (பெருந்தொகை 904) என ஈழத்து வேழத்தின் சிறப்புக் காண்க. இவன் முதலாம் பராந்தகன். இவனை "மதுரையும் ஈழமுங் கொண்டகோப்பரகேசரிவர்மன்" எனச் சாசனங்கள் கூறும். சூரவாதித்த சோழன், கரிகாலன், கோச்செங்கணான், விசயாலயன், முதற் பராந்தகன் என்ற ஐவர் கூறப்பட்டனர் ஈண்டு. |