வரிகள் 40 - 50 : சூழிமத் .............கொண்டகோன் சொற்பொருள் : முகபடாம் அணிந்த மதயானையால் பதினெட்டுப் பாலைநிலங்களையும் அழித்து உதகை என்ற ஊரினையெரித்த வலிமையுடையவனும், பழைமையான வானிலுள்ள கங்கை, நருமதை, கௌதமி, காவிரி என்ற யாற்றிற்குச் சென்று தன் மனைவியுடன் மூழ்கி வந்த பண்புடையவனும், பெருகி யலை வீசுகின்ற கடல் சூழ்ந்த பூமி முழுவதும் சென்று பகைவர்களாகிய மீன்களைப் போர் என்ற வலை வீசிப் பிடித்து வந்த மன்னவனும், கொலை புரியும் யானைகள் பத்துப் பத்து ஆகப் பசியுடைய பேய்கள் பற்றி விழுங்கும்படி கொப்பம் என்ற இடத்தில் ஒரு பட்டத்து யானையாற் போர் புரிந்து வென்று ஒப்பற்ற பரணி நூல் பெற்றுக் கொண்டவனும், அந்நூலுக்கு ஒப்பாக ஒருவரும் பாடுதற்கு அருமையான பரணி என்ற நூலைத் தன் பட்டத்து யானை யொன்றினாற் கூடல சங்கமம் என்ற இடத்திற் போர் புரிந்து வென்று கொண்ட வரசனும். விளக்கம் : உதகை - சேர மன்னனுடைய நகர். அதனைத் தீத்தவுரவோன் : முதல் இராச ராசன். தீத்தல் - தீக்கொளுத்தியெரித்தல். சுரம் - பாலைவனம். பதினெட்டுப் பாலை நிலங்களையும் அழித்து உதகையையும் தீக்கிரையாக்கியவன் இவன் மட்டித்து - அழித்து. (விக்கிர - உலா, 33) (குலோத்-உலா.47,48), (கலிங்கத்-இராசபா.24), (குலோத்துங். பிள்ளைத் தமிழ் 58) இவ்வரலாறு காண்க. மங்கையுடன் கங்கை முதலிய யாற்றின் நீராடியவன் கங்கைகொண்ட சோழன் : இராசேந்திர சோழன் என்பவனும் அவனே. வேலை - கடல். இது கடல் சூழ்ந்த பூமியை யுணர்த்தியது. வேலையனைத்தும் - பூமி முழுவதும் எனப் பொருள் கொள்க. தெவ் - பகைவர். தெவ் + மீன் = தெம்மீன் என்றாயிற்று. பகைவரை மீனாக வுருவகப் படுத்தியதற்கு ஏற்ப, போர் வலை வீசி எனப் பொருத்துக. பகைவரைப் பற்றிக் கொண்டு வந்து சிறை வைத்தவன் என்பது கருத்து. வலைவீசி வாரிய மன்னன் விசயராசேந்திரன் என்பர். காரணம் ஒன்றும் விளங்கவில்லை, அவன்தான் என்று கூறியதற்கு. ஆய்க. பத்துப்பத்து : பப்பத்து என்றாயிற்று. ஒவ்வொரு பேயும் பத்துப்பத்து யானைகளைப் பற்றித் தின்னும்படியாக ஆயிரம் யானைகளைக் கொன்று வென்றி கொண்டவன் எனவும் அதனால் அவன் மீது பரணி என்ற நூல் புனையப்பட்டது எனவும் தெரிகிறது. இவன் இராசேந்திரன் II. என்று தெரிகிறது. இவன் கொண்ட பரணி நூல் இப்பொழுது எங்குளது என்று தோன்றவில்லை. கொப்பம் என்பது போர் நிகழ்ந்த இடம் : இவன் செயல் (விக்கிர - 39, 40), (கலிங்கத். இராச. 27) காணலாம். கூடல சங்கமம் - ஓரிடம்; போர் நிகழ்ந்த இடம். பகடு - யானை : இது பட்டத்து யானையை யுணர்த்தும். பட்டத்து யானை யொன்றினால் ஆயிரம் யானைகளைக் கொன்று போர் வென்று பாடுதற்கு அரிய பரணி நூலினை யேற்றுக் கொண்டான் இவன் என விளக்கம் காண்க. ஆயிரம் யானையைக் கொன்றவனைப் பரணி நூலுக்குப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடுதல் மரபு. ஆதலால் இவனைப் பரணி கொண்ட கோன் என்றார். இப் பரணியும் அழிந்தது போலும். இது காறும் இந்நூல் கிடைத்திலது, இவன் வீரராசேந்திரன் எனத் தெரிகின்றது. ஈண்டு முதல் இராசராசன், இராசேந்திரசோழன. விசயராசேந்திரன், இராசேந்திரன் II, வீரராசேந்திரன் என ஐவர் செயல் கூறப்பட்டது என அறிக. |