| வரிகள் 50 - 58 : நாடும் .............நாயகன் சொற்பொருள் : நாட்டிலுண்டாகிய கலகமும், சுங்கமும் வருத்துகின்ற வறுமையும் நீங்குவித்து உலக முழுவதையும் அரசு புரிந்த வலிமையுடைய மன்னனும், பல நாடுகளும் தன்னொரு குடை நீழலிற் கறங்குமாறு வென்று "கலிங்கப் பரணி" என்ற நூலினைப் பாமாலையாகப் புனைந்து கொண்ட சூரியன் போன்ற மன்னனும், மாறுபாடில்லாத இந்திரனையும், சக்கரத்தைக் கொண்ட திருமாலையும் ஒத்த பூமி பாரந் தாங்கியவனும் பகைவரை வென்றவனும் ஆகிய விக்கிரம சோழனும் என்று பல பெயர் கொண்டு எல்லாவுலகங்களையும் காத்து நீண்டகாலமாக நிலைத்த பெரிய சிறந்த சோழ குலத்து முதல்வனும். விளக்கம் : சுங்கம் - வரி. கடலிற் செல்லும் கப்பலில் ஏற்றும் பொருள் இறங்கும் பொருள்களுக்கு ஒரு நாட்டரசனால் விதிக்கப்படும் இறை. அதனை வாங்காது விடுத்தவன் என்ற பொருள்பட "சுங்கந் தவிர்த்த சோழன்" எனப் பெயர் பெற்றான் இவன். கலகம் - குழப்பம், மாறுபாடு. கலி - வறுமை. இவற்றையும் தன்னாட்டில் இல்லாது நீக்கியவன். இவன் முதற் குலோத்துங்கன். விக்கிரம சோழனுலாவில் வரி 46 முதல் 54 வரையுள்ள அடிகளில் இவன் சிறப்புக் காண்க. (கலிங்கத். 258 - 260), (குலோத்துங்கனுலா வரி 51 - 53), ஆகிய இடங்களிலும் காண்க. கலிங்கப் பரணி புனைந்த பருதி என்றதும், அகிலதுரந்தரன் என்றதும் விக்கிரம சோழனைக் குறித்த பெயர்கள். பருதி - சூரியன். சூரியனைப் போலப் பகையிருளைப் போக்கியவன் என்பது பொருள். அகிலம் - எல்லாம். துரந்தரன் - வல்லவன். எல்லாச் செயலிலும் வல்லவன் எனப் பொருள் காண்க. புரந்தரன் - இந்திரன். நேமி - சக்கரம். இது சக்கரப் படையுடைய திருமாலை யுணர்த்தியது. பொருவும் - ஒத்த, நிகர்த்த. இந்திரனையும் திருமாலையும் போன்ற எல்லாம் வல்லவன் எனக் கொள்க. பல தரணியும் என மாற்றுக. ‘தக்கயாகப் பரணி' என்ற நூலில் (776) உரையில் "செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு, வருத்தந் தவிர்த்துல காண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே." இப் பரணி பாடினார் ஒட்டக் கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள்; இப் பரணி பாட்டுண்டார் விக்கிரம சோழதேவர்" என்று வரைந்திருப்பது காண்க. இப் பரணி நூல் கிடைத்திலது. திருக்குலத்து நாயகன் என்றது, இரண்டாங் குலோத்துங்கனை. இவன் செயல் பின்னும் கூறுகின்றார், வரி 66இல். சென்னி என்பது இம் மன்னனையே உணர்த்தும். இங்கு முதற் குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் இரண்டாங் குலோத்துங்கனும் கூறப்பட்டனர் என அறிக. நிலைத்த சோழ குலம் எனவும் அக்குலத்திற்கு நாயகன் எனவும் இரண்டாங் குலோத்துங்கனைக் கூறுக. |