பக்கம் எண் :

பக்கம் எண் :144

இராசராச சோழனுலா
 


 

59











67
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய

மாளிகையும் பீடிகையும் மாடமும் கோபுரமும்
சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான்

கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில்
வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம்

பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பெறிந்து
முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னித்

திருமகன் சீராச ராசன் கதிரோன்




 

வரிகள் 59 - 67 : சிற்றம்பலமும் .............சென்னித்திருமகன்

சொற்பொருள் : தில்லைநகர்த் திருக்கோயில் உள்ள சிற்றம்பலமும் சிறந்த பெருமையுடைய பேரம்பலமும் மற்றுமுள்ள பல பல மண்டபங்களும் சுற்றியுள்ள மாளிகையும், பீடங்களும் மாடங்களும் கோபுரங்களும், மேன்மாடங்களும் தெருக்களும் தோரணங்களும் நடராசப்பெருமான் கோயிலும் திருக்காமக் கோட்டமும், அக் கோயில் வாயிலும், அதனைச் சுற்றிய மாளிகையும் ஆகிய எல்லாவற்றையும் தூய பொன்னாற் புதுமையாகச் செய்து புறத்தேயிருந்து சிறு தெய்வமாகிய திருமாலை யெடுத்துக் கடலாகிய அகழியில் மூழ்குமாறு செய்தஅச் சோழனுடைய சிறந்த மைந்தன்.

விளக்கம் : மேற்கூறிய இரண்டாங் குலோத்துங்கன் தில்லையிற் செய்த திருப்பணிகள் வரி 59 - 66 வரை கூறப்பட்டது. சிற்றம்பலம் என்பது கூத்தப் பெருமான் ஆடல் செய்யும் இடம். பேரம்பலம் என்பது சோமாஸ்கந்தமூர்த்தி எழுந்தருளியுள்ள பெரிய அவை. மாளிகை - திருமாளிகைப்பத்தி. பீடிகை - இருக்கை. படிவங்களையிருத்துவதற்காக அமைக்கப்படுவது. தோரணம் - வாசிகை வடிவாக அமைத்த மகர தோரணம். ஆளுடையான் - சிவபெருமான் : எம்மையடிமையாகக் கொண்டவன் என்பது பொருள். திருக்காமக் கோட்டம் : சிவகாமசுந்தரி என்பது அம்மை கோயில். திருச்சுற்று மாளிகை - கோயிற்புறம் வளைந்த திருமதிலையடுத்த மாளிகை. புறம்பில் - புறத்தில். குறும்பு - சிறு தெய்வத்தைக் குறிப்பாலுணர்த்திப் பின் திருமாலைக் காட்டியது. சிற்றம்பலத்திற்குப் புறத்தேயிருந்த திருமால் படிவத்தை யெடுத்துக் கடலிற் போட்டு மறைத்த செயலை யுணர்த்தியது, புறம்பிற்........மூழ்குவித்த என்ற தொடர் எனக் கொள்க. இச்செயல் (குலோத். உலா 77 - 78) "முன்றிற் கிடந்த தடங்கடல் போய் முன்னைக் கடல் புகப் பின்னைத் தில்லை, மன்றிற் கிடங்கண்ட கொண்டல்" (தக்கயாகப் 777), இவற்றிற் காண்க. சிற்றம்பலம் பேரம்பலம் "பொன்னிற் குயிற்றிப் புறம்பிற்.........மூழ்குவித்த சென்னி" எனக் கூட்டுக. நாயகன் (58) ஆகிய சென்னி (66) எனக் கூட்டி, திருமகன் (67) அச்சென்னியுடைய திருமகன் எனக் கொள்க. திருமகன் : இராசராச சோழன். இரண்டாங் குலோத்துங்கனுடைய மைந்தனாகிய இராசராசன் என்க. இவனே பாட்டுடைத் தலைவன். இனி வருவது பாட்டுடைத் தலைவன் சிறப்பு.