பக்கம் எண் :

பக்கம் எண் :145

இராசராச சோழனுலா
 


 





70










77
திருமகன் சீராச ராசன் கதிரோன்
மருமக னாகி மறித்தும் - திருநெடுமால்

ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப்
பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற்

செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனுவம்ச மாமேரு - முந்தி

உடுத்த திகிரிப் பதினா லுலகும்
அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்

கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும்

தவன குலதிலகன் றன்பெருந் தேவி




 

வரிகள் 67 - 77 : சீராசராசன் .............தவன குலதிலகன்

சொற்பொருள் : மங்கலமான இராசராசன் என்ற பெயருடையவன்; சிறந்த நெடிய திருமாலானவர் சூரியன் வழித்தோன்றலாக வந்து முந்திய பத்துப் பிறவிகளிலும் பிறந்து தேவர்க்குள்ள பகை பாதியைத் தொலைத்து எஞ்சிய பாதிப் பகையையுந் தொலைப்பது கருதித் திருமாது மார்பில் வீற்றிருக்க வந்து பிறந்தவன் போன்றவன் : மனு குலத்திற் பிறந்த பெரிய மேருமலை போன்றவன் : பழைமையாகிய சக்கரவாளகிரி சூழ்ந்த பதினான்கு உலகங்களையும் அடுத்துத் தன்பாற் கொண்ட மேன்மையான மன்னர்க்கு மன்னன் : வலிய சச்கரப் படையுடைய கண்ணன் : கனகளபன்; கண்டன்; சூரியனும் குளிர்கின்றது என்று சொல்லத்தக்க கொற்றக் குடையுடைய சனநாதன் : யாவரும் மதிக்கும் சூரிய குலத்திற்குத் திகலம் பேன்றவன, (ஆகிய இராசராசன்) என்க.

விளக்கம் : வரி 66 - முதல் 77 வரை இராசராசன் சிறப்புக் கூறப்பட்டது. சீராச ராசன் வந்தான், மாமேரு, வரராச ராசன், கண்ணன், கனகளபன், கண்டன், சனநாதன் தவன குலதிலகன் ஆகிய இராசராசன் எனக் கூட்டுக. திருநெடுமால் மறித்தும் கதிரோன் மருமகனாகி மேதினியில் வந்தான் எனக் கூட்டுக. மீன் ஆமை முதலிய பத்துப்பிறப்பும் பிறந்தும் தேவர்பகை முழுதுந் தொலைக்க முடியாமற் பாதிப் பகையே தொலைத்தான் எனவும் எஞ்சிய பாதிப்பகையைத் தொலைப்பது பிறந்தான் கருதிச் சூரிய குலத்தில் வந்து இராச ராச சோழனாகப் எனவும் செந்தாமரையாள் மார்பில் வீற்றிருக்க வந்ததனால் திருமால் என்று தெளியலாம் எனவும் கருத்துத் தோன்றக் கற்பித்தார். மருமகன் - வழித்தோன்றல். மறித்தும் - மீண்டும். முன் பிறந்து மறைந்து பின்னும் வந்தான் என்பதை யுணர்த்திது. பாதிக்கு : பாதிப்பகையையுந் தொலைப்பதற்காக எனப் பொருள் கொள்க. வந்தான் போல வந்து பிறந்தவன் எனவும் மாமேரு போலத் துலங்குவோன் எனவும் கொள்க. வரம் - உயர்வு, மேன்மை வரராசராசன் : வடமொழித் தொடர். உயர்ந்த மன்னர்கட்கெல்லாம் உயர்ந்தவன் என்பது கண்ணன், கனகளபன் கண்டன் சனநாதன் இவை அம் மன்னனுக்குரிய மறுபெயர்கள் : தவனன் - சூரியன், திலகன் - பொட்டுப்போன்றவன். சூரிய குலமாகிய நெற்றிக்குப்பொட்டுப் போல விளங்குந் தோற்றமுடையவன் என்க. "கதிரோனும் தண்ணென் கவிகை" என்றது இம் மன்னனுடைய கொற்றக் குடை பகைவர்க்கு மிகவும் வெம்மையுடையது என்ற கருத்தினை யுட்கொண்டது. கதிரோனைக் கண்டவுடன் இருள் நீங்குவது போல் இவன் குடையைக் கண்டு பகைவர் ஓடிஒளிப்பர் என்றும் இவன் குடை கண்ட பகைவர் கதிரோனைக் குளிர்ச்சியுடையவன் என்று கூறுவர் என்றும் அவ்வாறு கூறும்படியிருப்பது அவன் கவிகை என்றும் விளக்கம் கொள்க. இத்தகைய சிறப்புடைய இராசராச சோழன் ஒரு நாள் என நிறுத்திக்கொள்க.