பக்கம் எண் :

பக்கம் எண் :146

இராசராச சோழனுலா
 


 





80








86
தவன குலதிலகன் றன்பெருந் தேவி
புவன முழுதுடைய பூவை - அவனியில்

எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப்
பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ

ஒகை விளைக்கு முபய குலரத்னத்
தோகை யுடனே துயிலெழுந் - தாகிய

முர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித்
தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி

மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலைக்க கடவ கடன்கழித்து - மூலப்




 

வரிகள் 77 - 86 : தன்பெருந்தேவி .............கடன்கழித்து

சொற்பொருள் : தன்னுடைய பெருந்தேவியும் புவன முழுதுடையவளும், இவ்வுலகில் பெரிய எட்டுத் திசைகளிலும் ஏறத்தக்கதாயும் தன்னுடனிருந்து ஆணை விடுக்கும் பெண் பெருமாளும் அந்தப்புரத்திலுள்ள பெண் பெருமாளும் மண்ணுலகத்தார் துதிக்கும்படி மகிழ்ச்சி யுண்டாக்கும் இரு குலங்கட்கு மணியும் ஆகிய தன்னுரிமை மனைவியுடன் உறங்கிய துயி லினீங்கி யெழுந்து குறித்த முழுத்தத்தில் பலவகை முரச முழங்கக் காவிரியாற்று நீரால் முழுக்காட்டப்பட்டபின் போர் செய்யும் ஆணைச் சக்கரத்தையுடைய தன் முன்னோர்கட்கும் தேவர்கட்கும் மறையோர்க்கும் காலையிற் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்து.

விளக்கம் : இராச ராசன் மெய்க்கீர்த்தியில் பெருந்தேவியின் பெயர் அவனி முழுதுடையாள் என்று காணப்படுகிறது. ஆதலால் இங்குப் "புவன முழுதுடைய பூவை" என்றார். மாதிரம் - திசை. "உடனாணைப் பெண் பெருமாள்" என்றது உடனிருந்து ஆணையை விடுப்பதற்கு உரிமையுடையவள் என முதன்மையைக் குறித்தது. மற்றுமுள்ள தேவியர் உடனிருந்தாணை விடுத்தற்குரியரல்லர் என்பதையும் விளக்கியது.

      முதலில் மணந்த குலமனைவியரே அதற்குரியமையுடையர் போலும். அந்தப்புரப் பெருமாள் என்றது அந்தப்புரத்தில் இருக்கும் தகுதியுடையவள் : தலைவி என்பதை விளக்கியது. காமக் கிழத்தி; காதற்பரத்தையல்லள் இவள் என்பதைக் குறித்தது. மன்னர்குல மங்கையரைப் பெருமாள் என்று கூறுவது மரபு. பெண் பெருமாள் : "பெண் பெருமாளுக்குப் பிள்ளையார் அருளிச் செய்வார்" (தக்கயாகப் 184 உரை) "நஞ்சிலே தோய்ந்த நளின விழிப் பெண் பெருமாள், நெஞ்சிலேயிட்ட நெருப்பு" (தனிப்பாடல்) இரு குலரத்னம் - பிறந்தகுலம், புகுந்தகுலம் ஆகிய இரண்டிற்கும் மணி போன்றவள். தோகை - மயில். இஃது ஆகுபெயர். இன்னகாலத்தில் நீராட வேண்டும் என்றும் இன்ன காலத்திற் பவனி புறப்பட வேண்டும் என்றும் முன்னரே கணித நூலோர் குறித்தனர் என்பது "ஆகிய மூர்த்தத்து" என்ற குறிப்பு மொழியாற் புலப்பட்டது. அபிடேகஞ் செய்தருளி - முழுக்காட்டப்பட்டு. நீராட்டப்பட்டு. குரவர் - பெரியோர். மேலை - முன்னுள்ள நீராடியவுடன் முன்னோர்களைக் குறித்துச் செய்யும் தானம், கடவுட் பூசை குறித்துச் செய்யும் தானம், மறையவர்கட்குச் செய்யும் தானம் இவற்றை வழங்கியதுவே காலைக் கடவகடன் எனக் கொள்க