வரிகள் 86 - 94 : மூலப் .............சிந்தித்து சொற்பொருள் : எல்லாவகை யணிகளுக்கு மூலமாகிய பெருமை பெற்ற உயர்ந்த வணிகலன் ஆகிய கிரீடத்தைத் தமது குலமுதலவனாகிய சூரியன் காலையில் வருந் தோற்றத்தின் அழகு என்று சொல்லுமாறு புனைந்து, பவளம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் திருவாய் மலர்ந்த படியே வெண்மையான மூன்று வரியாகத் திருநீறணிந்து நீலமலர் போன்ற தன் கரிய வடிவழகைக் கண்ணாடியில் தன் மகனாகிய மன்மதன் போர்க்கோலம பார்ப்பவனைப் போலப் பார்த்துப் பழைமையான மன்னர் குலங்கட்கெல்லாம் வணங்குங் குலதெயவமாகிய தில்லைத் திருநடனத்தை மனத்துட் சித்தித்து. விளக்கம் : மூலப்பெரும் பேரணி என்றார் கிரீடத்தை; முதன்மையும் பெருமையும் வாய்ந்த அணி அதுவேயாதலின். பிதாமகன் - மூதாதை, இது சூரியனை யுணர்த்தியது. காலையிற் சூரியனைக்காணுங் காட்சி போலத் தோன்றியது முடிபுனைந்த காட்சி. பவளச்சடையோன் பணித்தபடி என்றது, சிவபெருமான் முதலில் ஆகமங் கூற அதன் பின்னரே நந்தி முதலியோர் கூறினர் என்ற குறிப்புக் காட்டியது. பவளச் சடையோன் - சிவன். சிவாகமத்திற் கூறியபடி திருநீறு புனைந்து என்க. புண்டரம் - கீற்று, வரி. இராச ராசன் கருமை நிறமுடையவன் என்பதை விளக்க கார்க்கோலம் என்றார். திருமால் நிறமும் அதுவே, யாகலின் திருமாலே யிவன் என்ற கருத்தினால் "மகன்காமன்" என்றார். காமனது போர்க் கோலத்தைக் கண்டு எனக் கூட்டுக. மன்மதன் போர்க் கோலங்கொண்டு மங்கையரை வருத்தச் செல்வது போல இருந்தது என்பது கருத்து. |