வரிகள் 128 - 134 : திருத்தக்க கொற்றக்.........கொடியோங்க சொற்பொருள் : செல்வத்திற்குத் தகுந்த வெற்றியைக் காட்டும் வெண்குடை நிழலைச் செய்யவும், குளிர்ச்சியாக இருபுறத்தும் திரட்சியாகிய வெண்சாமரையானது இளங்காற்று வீசவும் ஒரு வலம்புரிச்சங்கு முதலில் ஊதப் பின் மற்றுமுள்ள பல சங்குகள் முழங்கவும், ஒலிக்கின்ற மூன்று முரசங்களும் முழங்கவும், இடத்தைவிட்டுப் பெயர்ந்து வாளாயுதங்கள் சுழலவும் அவற்றைக் கண்டு வீரமன்னர்கள் நெருங்கவும், கொல்லும் புலியாகிய வெற்றிக்கொடி யுயர்ந்து தோன்றவும். விளக்கம் : திரு - அரசு ஆகிய செல்வம். அதற்குரிய குடைய எனக் கொள்க. தகுதிக்கேற்ற உடை நடை உரை முதலியவை யமைந்திருப்பதுதான் சிறப்புத் தரும். ஆதலால் அரசுக்கு தக்ககுடை என்பது கருத்து. அரசர்க்கு இருபுறத்திலும் கவரி வீசினர் என்பது தோன்ற ‘இரட்டைக்கவரி' என்றார். வலம்புரி என்பது வலப்புறமாக வளைந்திருக்கும் முறுக்கு உடைய உயர்ந்த சங்கு மன்னர் புறப்பட்டவுடன் வலம்புரி ஊதிப்பின்னர் இடம்புரி முதலிய பல சங்கும் ஊதுவது மரபு எனவறிக. வாட்படை வீரர்கள் யாவரும் வாளையுயர்த்திப் பிடித்துச் சுழற்றி மன்னர்க்குப் புறத்தே சூழ்ந்து காவலாக வந்தனர் என்பது தோன்ற ‘வாட்படை கொட்ப' என்றார். கோள் - கொள்ளுதல்; தீமையும் ஆம். பிற விலங்குகளையடித்து உணவாக்கிக் கொள்ளும் புலி எனக் கொள்க. தீமை விளைக்கும் புலி எனினும் பொருந்தும். நிழற்ற, காலசைப்ப, சிலம்ப, ஆர்ப்ப, கொட்ப, நடுங்க, ஓங்க என்ற செயவெனெச்சங்களை இவ்வுலா நூலின இறுதியிலுள்ள "போந்தான் உத்துங்க துங்கன் உலா" என்பதனோடு கூட்டி முடிவு செய்க. இனி வரும் எச்சங்கட்கும் இதுவே முடிவு எனக் கொள்க. |