வரிகள் 547 - 556 : கூனலியாழெடுத்தான்...........வேனிலான்பாணி சொற்பொருள் : பாணன் வளைவாகிய தன் யாழினைக் கையிலெடுத்தான். (அவன் எடுத்தது கண்டு) வேனிற் பருவத்துக்குரிய அரசனாகிய காமனும் சினந்து எழுந்து தன் வளைந்த வில்லை யெடுத்தான். தேன்போல் ஒழுகிய நரம்புகளை யாழ்ப்பாணன் கையாற் றடவினான். கொடிய வலிமையுடைய மாரனும் தன் வில்லிலுள்ள நாணியைக் கையாற் றடவினான். முதலில் நிறைந்த நரம்புகளைச் சுருதிக்குப் பொருந்தும்படியமைத்து ஏழிசைகள் நிற்கும் நிலைகளை ஆராய்ந்தான் பாணன். வலிமையுடைய காமனும் தன் அம்புகளை ஆய்ந்து அவற்றின் நிலையை யாய்ந்தான். விறலியோடு சேர்ந்து பாணன் ஒரு பாட்டினைக் கோத்தான். மதனும் சினந்து தனது அம்பறாத் தூணியில் அம்புகளெல்லாந் தொலையும்படி பல பாணங்களைக் கோத்தான். பாணனது யாழினின்றெழுந்த இசைப் பாடல்கள் இனிமையாக ஒலித்தன. மதனுடைய கரங்கள் பாணங்களையேவி வேகமாக விடுத்தன. விளக்கம் : இசைப் பாடல் காமத்தை மிகுவிக்கும் என்ற கருத்தினால் இங்குப் பாணனுடைய செயலினையும் காமனுடைய செயலினையும் ஒன்றாக்கிக் கூறினார். சோழனுடைய மலை யாறு முதலியவற்றைக் குறித்துப் பாடுக என அவள் பணித்தமையான் அம் மன்னன்மீது முன்னரே காதல் கொண்டிருந்தவள் அவள் என்பது நன்கு விளங்கும். யாழெடுத்தபோது காதல் துவங்கியது; நரம்பைத் தடவும்போது அவளுக்குக் காதல் பரவியது. பண்ணின் நிலை தெரியும்போது அவட்குக் காமநிலை தெரிந்தது. பாணன் பாடியபோது காம மிகுந்தது. மயக்கமடையும் நிலையாயினள் என்பது கருத்து. மன்மதன் அம்புகளை அதிகந் தொடுத்தான் என்றால் காமமிகுந்தது என்பதுதான் பொருள். பாணன் யாழ் எடுத்தான்; காமன் வில்லெடுத்தான்; நரம்பு தைவந்தான்; நாண் தைவந்தான், சுருதி தெரிந்தான், அம்பு தெரிந்தான், பாணி கோத்தான், அம்பு பல கோத்தான் எனச் சொற்களை முறையே அடுக்கியிருக்கும் நயம் ஆசிரியர் புலமையைக் காட்டுவதாம் தைவந்தான் - தடவினான். தெரிந்தான் - ஆராய்ந்தான். பாணன் யாழ் எடுத்தான் எனவும் வேனலரசனும் வில்லெடுத்தான் எனவும் எழுவாய் செயப்படுபொருள் பயனிலைகளை முறைப்பட வைத்துப் பொருள் காண்க. பின் வந்த கண்ணிகளிலும் இவ்வகையே பொருள் கொள்க. |