பக்கம் எண் :

பக்கம் எண் :59

விக்கிரம சோழனுலா

தெரிவை
 


 

556



560








569
விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த
வீணை யிசையாலோ வேனிலான் அம்பாலோ
வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம்
வாடை அனைய மலையா நிலந்தனையும்
கோடை இதுவென்றே கூறினாள் - நீடிய
வாடை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
நீரை இதுவோ நெருப்பென்றாள் - ஊரெலாங்
காக்குந் துடியை அழிக்குங் கணைமாரன்
தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும்
வாழும் உலகத் தெவரும் மனங்களிப்ப
வீழும் நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன்
எங்கோ னகளங்கன் ஏழுலகுங் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள் - கங்குல்
புலருந் தனையும் புலம்பினாள் ஆங்குப்




 

வரிகள் 556 - 569 : விசைத்தெழுந்த........புலம்பினா ளாங்கு

சொற்பொருள் : நரம்பினின்று விசையாக எழுந்த வீணையிசையினாலோ மன்மதன் அம்பின் விசையாலோ ஒளி பொருந்திய நெற்றியுடையவள் மதிமயங்கி வீழ்ந்து சேய்மையில் உலவுகின்ற வாடையைப் போன்ற தென்றற்காற்றினையும் கோடைக் காற்று என்றே கூறினள். நீண்ட கச்சினை வெறுத்த அழகிய முலைமேல் தெளித்த பனிநீரை இதுவோ நெருப்பு என்றாள். ஊரிலுள்ளவரை யெல்லாம் காப்பதற்கு முழக்கும் காவற்பறையை வருத்தும் அம்புடைய மன்மதன் முழக்கும் போர்ப் பறையென்றே புகன்றாள் வாழ்கின்ற உலகத்து மனிதர் யாவரும் மனமகிழும்படி படுக்கைகளில் நிலாவை வெயில் என்று கூறினாள். உறையூர் மன்னன், அகளங்க (விக்கிரம சோழ) னுடைய ஏழுலகத்தையும் புரக்கின்ற செங்கோல் (என் போன்ற சிலர்க்குக் கொடுங்கோல் என்றுரைத்தாள். இரவு விடியும் வரையும் (இவ்வாறே) ஆங்குப் புலம்பினாள்.

விளக்கம் : அத் தெரிவை மயங்குதற்குக் காரணம் இன்னதென அறிய வழியின்று என்பார். இசையாலோ அம்பாலோ என ஐயுற்றுக் கூறினர். வாடை - வடக்கிருந்து வருவது. இது கார்காலத்தையடுத்த காலத்து வரும்; ஆதலால், அவ் வாடை வருங்காலத்தைக் கூதிர்காலம் எனக் கூறினர். மிகவும் குளிர்ச்சி தருவது வாடை. மழைபெய்து நிலங் குளிர்ந்தபின் வருவதனால் அதற்குக் குளிர்ச்சி இயற்கையா யமையும், தென்றலும் குளிர்ச்சி தருவதால் "வாடையனைய மலையாநிலம்" என்றார். மலையாநிலம் - தென்றல். மலையம் - பொதியமலை. அநிலம் - காற்று. மலையம் + அநிலம் = மலையாநிலம். கோடை = மேல்காற்று. வேனிற்காலத்து வருவதால் வெப்பமுடையது. தென்றலைக் கோடை என்று கூறினள். அவளுக்குக் காதலாற் குளிர்ச்சி வெப்பமாகத் தோன்றியது. கச்சணியுந்தோறும் நழுவுவது குறித்து "வாரை முனிந்த வனமுலை" என்றார். குளிர்ச்சியாய் இன்பந்தரும் பொருள் யாவும் காதல் நோயுடையார்க்கு வெப்பமாய்த் துன்பந்தருவது இயல்பு. ஆதலால் பனிநீரை நெருப்பென்றாள். துடி - உடுக்கை. ஊர்காவலர் முழக்குவர், அதுவும் பகைப்பொருள். மாரன் போர்ப்பறை முழக்க மென்றே கூறினள். சேக்கைதொறும் விழும் நிலவு படுக்கையிடங்கடோறும் வேண்டுமென்று விரும்பும் நிலவு எனவும் கொள்ளலாம். யாவரும் விரும்பும் நிலவை வெயிலென வெறுத்தாள் என்க. இறைவன் தன்னடிக்கீழ் வாழ்வார் படுந் துன்பங்களை நீக்கி யின்பமளித்துக் காப்பது நீதியாம். நம்மன்னனும் அவ்வாறுதான் காக்கின்றான். அதனால் செங்கோலன் என்று யாவருங் கூறுகின்றனர். ஆயினும் அவனைக் காதலித்த என் போன்ற சில கன்னியர் கருத்தறிந்து வந்து கலந்து இன்பம் அளித்திலன். அதனால் சிலர்க்கு அவனரசு கொடுங்கோலாகத் தோன்றும் என்ற கருத்து விளங்க "செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கு" என்றாள். காதல் கொண்ட கன்னியரைக் கலந்து இன்பமளிப்பதும் அரசன் செய்யும் முறையாம் என்பது அவள் கருத்து. இரவில் இசைகேட்டபின் விடியுமளவும் காதலாற் பலபடப் புலம்பினள் என்க.