பக்கம் எண் :

பக்கம் எண் :60

விக்கிரம சோழனுலா

பட்டத்து யானையை நோக்கிப் பரிவு கூறுதல்

 


 

570



574
 
பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ்
ஆழிப் புவனம் அடைய உடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - யாழின்
இழைக்கு மிசைமுதலா எப்பகைக்கும் ஆற்றா
துழைக்கும் உயிர்தழைப்ப வோடிப் - பிழைத்தனளாய்




 

வரிகள் 570 - 574 : பலரும் பணிந்து............ஒடிப்பிழைத்தனளாய்

சொற்பொருள் : பெரிய மலைகள் சூழ்ந்த கடல் சூழ்ந்த உலக முழுவதும் உரிமையாக உடைய மன்னன் சோழன், பலரும் வணங்கித் துதிக்கும்படி முகபடாம் அணிந்த யானைமேற் பவனி வர, அத் தோற்றங்கண்டு வீணையின் மீட்டிய இசை முதலாகிய எப்பகைக்கும் பொறுக்கமுடியாமல் வருந்திய உயிர் செழிக்க எழுந்து ஓடிப்பிழைத்தவள் ஆகி நின்று.

விளக்கம் : பலரும் பணிந்து பரவ பிரான், யானை தோன்றுதலும் என்பதை, பிரானைத் தாங்கிய யானை தோன்றுதலும் என்றாவது பிரான் யானையின்மேல் தோன்றுதலும் என்றாவது உருபு விரித்துக்கொள்க. யானையும் பிரானும் இயைந்தே வருவர் ஆதலின், இசை முதலிற் பகையாயிருந்தது; பின்னர்த் தென்றல், பனிநீர், துடி, நிலவு இவையும் பகையாயின; ஆதலால் ‘இசைமுதல் எப்பகைக்கும் ஆற்றாது' என்றார் பல பகைவர் நடுவே வருந்தி யுயிர் விடும் அமையத்து யானை தோன்றியது. கண்டவுடனே பகைவரிடமிருந்து தப்பிப்பிழைக்க வோடுவோர் போல் ஓடினள் என்ற கருத்தமைய "ஓடிப் பிழைத்தனளாய்" என்றார்.