வரிகள் 575 - 586 : முட்டுத் திகிரி கிரியன்............அசனியேறே சொற்பொருள் : (வானத்தை) முட்டுகின்ற சக்கரவாளகிரியின் பழைமையான முதுகிற்கட்டிய தெய்வத்தன்மை வாய்ந்த மதயானைகள் எட்டுந் தாங்கிய உலகத்தைத் தனியாகத் தாங்கிய மன்னனைத் தாங்கிய அயிரா பதமே! செருக்குற்று நட்பாகப் பொருந்துவதை நினையாத போர்புரிந்த கலிங்கநாட்டினர் தோற்றோடிப் போயிருந்த வடக்கிலுள்ள மலைகளெல்லாம் சூரிய மண்டலத்தோடு முட்டிப் பொருது கெட்டுப்போன விந்த மலையைப்போலப் புதையும்படி அவற்றின்மேல் நடந்த மலையே! கெடாத சந்திரகுலத்திற்கும் தெய்வத்தன்மையுள்ள பொதிய மலைக்கும் அழகிய இடம் பரந்த பழைமையான குமரியாற்றிற்கும் தங்களுடைய நாட்டிற்கும் போர்புரியும் பாண்டி மன்னராகிய பாம்புகள் நடுங்கி விழும்படி பிளிறுகின்ற ஒப்பற்ற இடியேறே! (என யானையை நோக்கி விளித்தனள்.) விளக்கம் : கடாயானை எட்டும் என்றது திக்கு யானைகள் எட்டினையுங் குறித்தது. உலக முழுவதையும் வளைத்துக் கோட்டைபோலச் சூழ்ந்து நிற்பது சக்கரவாளகிரி ஆதலால் அதன் முதுகிற் கட்டிய எட்டு எனத் திசையானையின் சிறப்புக் கூறினர் ஒவ்வொரு திசையின் முடிவெல்லையில் அவை நிற்பன என்பது நூல்மரபு. எட்டுத்திக்கு யானைகளாலும் தாங்கப்பட்ட உலகத்தைத் தனியே தாங்கு மன்னனை நீ தாங்கி வருகின்றாய்; உன் வலிமை மிகவும் சிறந்தது. உன்போன்ற வலிமையுடையவர் யார் உளர் என்ற கருத்துத் தோன்ற "எட்டும் தரிக்கும் உலகம் தனிதரித்த கோனைப் பரிக்கும் அயிராபதமே" என்றார். கலிங்கர் தோற்றுப் புறங்காட்டி ஓடி யொளித்த வடக்கிலுள்ள மலைகளெல்லாம் விந்தகிரிபோலப் புதையும்படி அவற்றின்மேல் நடந்த மலையே என்றது, முன்னிகழ்ந்த கலிங்கப்போரில் ஓடி யொளித்தவரைத் தேடிச் சோழன் சென்றபோது நீ அவனைத் தாங்கிச் சினந்து விரைந்து அம் மலைகள்மேல் நடந்தனை யென்றும், அப்போது மலைகள் விந்தம்போல் மண்ணிற் புதைந்தனவென்றும், அம் மலைகட்கெல்லாம் பெரிய மலையாக உன்தோற்றம் இருந்ததென்றும் யானையைப் புகழ்ந்த குறிப்பிது. வடவரைகளெல்லாம் விந்தமே போலப் புதைய எனக் கூட்டுக. தமது குலம், மலை, யாறு, நாடு இவற்றைப் பிறர் கவரநினைத்தபோது போர்புரிவர் என்பது தோன்ற "திங்கட் குலத்திற்கு.......படிக்கும்பொரும்" என்றார். இடி முழக்கம் கேட்டாற் பாம்புகள் நடுங்கி இறப்பது இயற்கை. ஆதலாற் பன்னகங்கள் வீழ என்றார். பன்னகம் - பாம்பு. அசனி - இடி. ஏறு - ஏறுவது. பொருள்மேல் விழுந்து துளைத்துச் செல்வது. இடியாகிய ஏறு இருபெயரொட்டு எனக்கொள்க. நிருபர் - மன்னர். நிருப பன்னகம் என உருவகமாக்கினர்; யானையை இடியேறு என்று கூறியதற்கேற்ப, சோழன் யானை பிளிறுவது கேட்டால் பாண்டியமன்னர் நடுங்குவர் என்பது தோன்றும். ஒருவர்பாலுதவிபெற விரும்பியவர் அவரைப் புகழ்வது இயல்பு. அது போல யானையின் உதவி பெற இன்தெரிவை விரும்பியதால் இவ்வியானையை இவ்வாறு புகழ்ந்தனள் எனக் கொள்க. |