பக்கம் எண் :

பக்கம் எண் :62

பட்டத்து யானையை நோக்கிப் பரிவு கூறுதல்

 


 

586



590







598
இடிக்குந் தனியசனி ஏறே - கடிப்பமைந்த
யாம முரசால் இழந்த நிறைநினது
தாம முரசு தரப்பெற்றேன் - நாம
விடைமணி யோசை விளைத்த செவிப் புண்ணின்
புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடமுலைமேல்
ஊறா மலையக்கால் சுட்டசூ டுன்செவியின்
மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக்
கூசும் பனித்திவலை கொண்டுபோம் என்னுயிர்நீ
வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய
காருலாம் ஓதக் கடல்முழங்க வந்ததுயர்
நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில்
என்மேல் அனங்கன் வரவந்த இன்னலெலாம்
நின்மேல் அனகன்வர நீங்கினேன் - இன்னங்




 

வரிகள் 586 - 598 : கடிப்பமைந்த..............அனகன் வர நீங்கினேன்

சொற்பொருள் : குறுந்தடியோடு பொருந்திய யாமந்தோறும் அடிக்கப்படும் முரசின் ஒலியால் நான் இழந்த நின்ற எனும் பண்பினை நினது வரவறிவித்த மாலையணிந்த முரசின் ஒலியானது தரப்பெற்றேன்; அச்சத்தைத் தரும் காளையின் கழுத்து மணியொலிண்டாக்கிய செவிப்புண், நின் இருபுடையும் உள்ள மணியோசையால் ஆறப்பெற்றேன். பொருத்த கொங்கைமேல் தென்றற்காற்றுச் சுட்ட நீங்காத வெப்பத்தை உன் செவிகளிலிருந்து வரும் நீங்காத காற்றினான் மாற்றினேன். நடுங்கச் செய்யும் பனித்துளிகள் (உடம்பினின்றும்) வேறாகப் பிரித்துக் கொண்டுபோன என்னுயிரை நீ வீசிய மதத்துளிகளால் திரும்பப் பெற்றேன். நெருங்கிய மேகங்கள் உலாவுகின்ற அலைகளையுடைய கடல் முழங்க அதனால் உண்டாகிய என் காமநோய் வருத்தத்தை ஒப்பற்ற நீ முழங்க அதனால் நீங்கினேன். பெருகிய இரவில் என்மீது மன்மதன் போர் செய்ய வந்த துன்பங்களெல்லாம் நின்மீது சோழன் பவனிவரக்கண்டு நீங்கினேன் (என்று கூறினள்.)

விளக்கம் : யாமந்தோறும் ஊர்க்காவலர் அடிப்பதனால் அது "யாமமுரசு" எனப்பட்டது. ஏடகம் பொதிதார் பொருந்திட யாமபேரி யிசைத்தலால் (கம்ப. கைகே. 57) என்று கூறுவதும் காண்க. யாமமுரசு, விடைமணி, மலயக்கால், பனித்திவலை, கடல் முழக்கம், அனங்கன் ஆகிய பொருள்கள் காம நோயைத் தந்தன. சோழன் ஏறிவந்த யானையைக் கண்டவுடன் அந்துயரமெல்லாம் நீங்கின என்பது கருத்து. நிறை மனத்தை வேறுவழிச் செல்லாது நிறுத்துவது செவிப்புண் என்றது ஒலி கேட்டுக்கேட்டு வெறுப்படைந்ததைக் குறித்தது. புண் புலர்ந்தேன் என்றது. உன்கழுத்து மணியோசை கேட்கக் கேட்க விருப்ப முற்றேன் என்பது. செவியில் மாறாப் பெருங்காற்று என்பது, யானை செவிகளை யசைக்கும்போது எழும் பெரிய காற்றினைக் குறித்தது. திவலை - துளி. ஓதம் - அலை; ஒலி எனவும் கூறலாம்.