பக்கம் எண் :

பக்கம் எண் :63

விக்கிரம சோழனுலா

பட்டத்து யானையை நோக்கிப் பரிவு கூறுதல்

 


 



600








609
நின்மேல் அனகன்வர நீங்கினேன் - இன்னங்
கடைபோக என்னுயிரைக் காத்தியேல் வண்டு
புடைபோதப் போதும் பொருப்பே - விடைபோய்நீ
ஆட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய்
கார்நாணும் நின்கடத்து வண்டொழியக் காமனார்
போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன்
செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார்
வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட்
குயிராய் உடலாய் உணர்வாகி உள்ளாய்
அயிரா பதமேநீ யன்றே - பெயராது
நிற்கண்டா யென்றிரந்து நின்றாள் நுதலாக




 

வரிகள் 598 - 609 : இன்னும் கடை...........என்றிரந்து நின்றாள்

சொற்பொருள் : இன்னும் முடிவுவரையும் என்னை நீ காக்கக் கருதுவையாகில் வண்டுகள் இருபக்கத்திலும் செல்லச் செல்கின்ற மலைபோன்ற யானையே விடுத்தலாற் சென்று நீராடும் பொய்கையைக் கலக்குவாயின் காமனுக்குக் கூரிய அம்பு காட்டி நிற்கும் பொய்கையையே கலக்கவேண்டும். இன்னும் கேட்டருள்க. மேகமும் எதிர்வர நாணும் கரிய உருவத்தையுடைய நின் மதத்திற் படியும் வண்டுகளை யொழித்துக் காமன் போர்க்குப் பூட்டும்வில்லின் நாணியாகிய வண்டுகளையே அடித்துக் கொடுக்கவேண்டும். பூமிக்கு மன்னனாகிய சோழன் சிவந்த கையிலுள்ள கரும்பினையொழித்து, நீ தின்பதற்கு மன்மதன் கை வில்லாகிய கரும்பினையே விரும்பவேண்டும். எங்கட்கு உயிராகி உடலாகி அறிவாகியிருப்பாய் நீயன்றோ அயிராபதமே பெயராது நில் என்று கூறி வேண்டி நின்றாள்.

விளக்கம் : விடை - விடுத்தல். அரசன் பவனி முற்றி யானையை விடுத்தலை யுணர்த்தியது விடுத்தபின் போய் என்பது பொருள். ஆடுந் தடம் என்பது விரித்தலாகி ஆட்டுந்தடம் என நின்றது. பாகர் என்பதை வருவித்துப் பாகர் விடைபெற்று சென்று உன்னை நீராட்டுகின்ற தடம் என்றும் பொருள்கொள்ளலாம். காமனுக்கு அம்புகள் என்று கூறப்படுவன ஐந்து மலர்கள். "முல்லை, அசோகு, முழுநீலம், சூதப்பூ, அல்லி மலரோ டிவ் வைந்து" என்பன. அவை முல்லை அசோகு சூதம் மூன்றும் கோட்டுப்பூவாதலால் அவற்றை யொழித்துப் பொய்கையில் மலரும் பூக்களை மட்டும் கொள்க. அல்லிமலரும் நீலமலரும் பூத்த பொய்கையைக் கலக்கிப் பூக்களைத் தொலைத்துவிடு என்பது பொருள். அல்லிமலரை யொழித்துத் தாமரைமலரை அம்பாகக் கொள்வார் பலர். மன்மதன் கை வில் கரும்பு, வில் நாணி சுரும்பு, வில்லின் வைத்துத் தொடுக்கும் அம்பு மலர் இம்மூன்றையும் நீ தொலைத்துவிட்டாற் காமன் போர் புரிய வர மாட்டான். எம்போல்வார் துன்பம் நீங்கும். ஆதலால், இச் செயல்புரிய வேண்டும் என்று கூறி வேண்டினள். பெயராது சிறிதுநேரம் நில் என்றும் வேண்டினள் எனக் கொள்க. கண்டாய்: முன்னிலையசை. நில் என்று இரந்து நின்றாள் என்று முடிக்க.