வரிகள் 609 - 618 : நுதலாக விற்..........மலர்பறிப்பாளொப்பாள் சொற்பொருள் : வில்லை நெற்றியாகக்கொண்ட வேறு ஒருத்தி பேரிளம்பெண் கொற்கைநாட்டரசனாகிய வலிய புயமுடைய சோழனது மதயானையின் கைபோலக் கொல்லுவதற்காகத் திரண்ட துடையுடையாள்; அளவில்லாத வளைந்த கொலை பதிக்கப்பட்ட சேடன் முடியிலுள்ள நிறமான நாகமணியைப் புனைந்து நடிக்கும் படம்போன்ற அல்குலுடையவள்; பாங்கியாகித் தம்மைத் தாங்கி இடையைத் தேய்த்தழித்த தமது பழிக்கு நாணி வட்டவடிவமான முகத்தைச் சாய்த்ததுபோலக் கவிழ்ந்த கொங்கை யுடையவள்; திருமகள் தனக்கு நிகர் ஒருவரும் இல்லாமற்செய்து தானுறையும் மலரையும் பறித்து நின்றவளைப் போன்றவள். விளக்கம் : யானைக் கை கொல்லுந் தொழிலுடையது; திரண்டது. அதுபோலத் துடையும் கொல்லுந் தொழிலுடைய தாய்த் திரண்டது என உவமையை விரிக்க. பாம்புகளிற் சிறந்த பாம்பு ஆதிசேடன். அவனுடைய படம் போன்ற அல்குல் என உவமையை யுயர்த்தி அல்குற்குச் சிறப்புக் காட்டினர். குரு - நிறம். மணி - இரத்தினம். நாகமணி மேற்கொண்ட படம் என்று கொள்க. பேரிளம் பெண் ஆண்டு நாற்பது சென்றவள். ஆதலால், அவள் கொங்கை சிறிது சாய்ந்திருந்தது என்பது தோன்ற. "முகஞ்சாய்த்த கொங்கையாள்" என்றார். கொங்கைகள் தம்முகம் கவிழ்ந்த தோற்றம் பாங்கியரைப்போல எப்போதும் தம்மைத் தாங்கிச் சுமந்திருந்த இடையைத் தேய்த்து வருந்திக் கெடுத்த தம் பழிச்செயலுக்கு நாணித் தலைகவிழ்ந்தது போலத் தோன்றியது என்றார். பிறந்த குழந்தையை நடந்து செல்லும் பருவம் வரையிற் சேடியர் தூக்கிச் சுமந்து வளர்ப்பதுபோல இடையும் கொங்கை தோன்றிய காலமுதற் சுமந்து வட்டமாய் வளரும் பருவம் வரை தாங்கியது என்ற குறிப்புத் தோன்ற, "சேடியாய்த் தம்மை யெடுக்கும் இடை" என்றார். அறிவுடையோர் பழிக்கு நாணுவர்; தலைகவிழ்ந்து நிற்பர். அவரைப்போலக் கொங்கைகளும் நன்றி மறந்து தீதுசெய்த தம் பழிக்கு நாணிக் கவிழ்ந்தன என்பார், ‘முகஞ்சாய்த்த' என்றார். ‘சாய்த்ததன்ன கொங்கை' எனக் கொள்க. செய்யாள் - திருமகள் (இலக்குமி) அழகில் ஒருவரும் தனக்கு நிகரில்லாமற் கெடுத்துப் பின் தாமரைமலரையும் பறித்தெறிந்து வெளியில் வந்த திருமகள் போன்றவள் என்பது. பகையிருக்கும் வரையும் மறைந்திருப்பார். பகைவரில்லையெனில் வெளிப்பட்டு எங்குந் திரிவர். இஃது உலகியற்கை. அதுபோலத் தாமரையைப் பறித்தெறிந்து வெளியேறிய திருமகள் வந்தனள் என்று கொள்க. |