வரிகள் 618 - 628 : நறைகமழும்மாலை............தமர்மேலயர்ந்தாள் சொற்பொருள் : (அப் பேரிளம்பெண்) மணம் கமழும் பூமாலை பல புனைந்து கத்தூரிக்குழம்பு பூசிக் கடலிற் பிறந்த முத்துமாலையணிந்து பூஞ்சோலையில் மானும் மயிலும் போன்ற பாங்கியரும் தானும் அழகுடன் அமர்ந்திருப்ப வண்டுகள் ஒலிக்கும் கள் ஊறுகின்ற இளம் பாளையின் உச்சியில் உண்டாகிய கடுப்புடைய கள் வடிந்திறங்கிய அமையத்தில் அக்கள்ளை வேறாகக் குடத்தினிரப்பி வண்டுகளையும் அதிலுள்ள நுரையையும் போக்கி ஒருத்தி புகழ்ந்து பேசிக் கொடுக்கப் பார்த்து வருந்திச் சிறிய கள்ளின்றுளியைக் கூரிய நகத்தாலெடுத்துத் தெறித்து விட்டுப் பின் உண்டு சுற்றத்தார்மேல் சோர்ந்து வீழ்ந்தாள். விளக்கம் : மானும் மயிலும் நோக்கத்திற்கும் சாயலுக்கும் உவமையாதலால் மான்போன்ற மருண்ட பார்வையும், மயில் போன்ற கண்ணுக்கினிய சாயலுமுடைய மடந்தையர் என்க மடந்தையர் - பெண்கள். இவர் பாங்கியர். மடல் - வாயகன்ற பாத்திரம். பனைமடல் எனவும் பொருள் கொள்ளலாம். மடலைக் குடையாக்கி யதிற் கள்ளுற்றிக் குடித்தலும் பண்டைக்கால வழக்கம் ஆம். இக்காலமும் பனைமடலைப் பயன்படுத்துவது காண்கின்றோம். கள்ளைக் கொடுக்கும்போது அதில் மொய்த்துக் கிடக்கும் வண்டுகளையும் நுரையையும் போக்கிக்கொடுப்பதும் குடிப்பவர் அக்கள்ளில் ஒரு துளியை விரனகத்தாற் றெறித்து விட்டுப் பின் குடிப்பதும் மரபு எனத் தெரிகிறது. கள்ளைக் கொடுப்பவர் அதனினிமையும் தெளிவும், குடித்தலால் உண்டாகும் இன்பமும் கூறிக் கொடுத்தல் இயல்பு என்பது தோன்றப் ‘புகழ்ந்து தர' என்றார். என்பொருட்டுக் கொணர்ந்த இக்கள்ளினை மறுத்தால் கொணர்ந்தவர் வருந்துவரே என்று கருதி வருந்திப் பின் அருந்தினள் என்பார், ‘நோக்கி வருந்தி' என்றார். |