பக்கம் எண் :

பக்கம் எண் :66

விக்கிரம சோழனுலா

பேரிளம்பெண்
 


 

628

630









640
அருந்தித் தமர்மேல் அயர்ந்தாள் - பொருந்தும்
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
நயக்கத் திருக்கனவு நல்கு - முயக்கத்து
மிக்க விழைவு மிகுகளிப்பும் அத்துயிலும்
ஒக்க இகல உடனெழுந்து - பக்கத்து
வந்து சுடரும் ஒருபளிக்கு வார்சுவரில்
தந்த தனதுநிழல் தானோக்கிப் - பைந்துகிற்
காசுசூழ் அல்குற் கலையே கலையாகத்
தூது புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர்
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
ஆடிய சாந்தின் அணிசிதைந்து - கூடிய
செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர
வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு
கண்டு மகிழ்ந்த கனவை நனவென்று
கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுவீழ்




 

வரிகள் 628 - 642 : பொருந்தும் மயக்கத்து...........குலாவுதலும்

சொற்பொருள் : (அயர்ந்தபோது) உண்டாகிய குடிமயக்கத்தில் மனுகுலத்து வந்த மன்னர்களில் உயர்ந்தவனாகிய விக்கிரமசோழன் வந்து விரும்பத்தக்க கனவிற் புணர்ந்த புணர்ச்சியால் மிகுந்த வேட்கையும், மிகுந்த கள்ளுண்ட மயக்கமும் அதனோடு கூடிய உறக்கமும் ஒன்றுக்கொன்று பகையாக, உடனே அதனாலெழுந்து பக்கத்துவந்து ஒளிவீசும் ஒருநீண்ட பளிங்குச்சுவரில் தோன்றிய தனது சாயையைக் கண்டு உயர்ந்த பவளமணி சூழ்ந்த அல்குலின் மேகலையே துகிலாகவும், துகில் பக்கத்தே பெயரவும் தோள் நெகிழவும், வாசனையுள்ள பூமாலை நீங்கவும், இரண்டாகிய கொங்கைகளிற் பூசிய சந்தனக்கோலம் அழியவும், கூடிய சிவப்புநிறமாகவும், வாய்வெண்மை நிறமாகவும், கரிய கண்கள் சிவப்பு நிறமாகவும், விரும்பும் ஒளிபொருந்திய நெற்றியில் வெயர்வை தோன்றவும் கூடிய கனவை நனவாகத் தன் கருத்திற்கொண்டு பலர்க்கும் பெருமையாகப் பேசியிருக்கவும்.

விளக்கம் : கள்ளுண்ட மயக்கம், அதனோடு சேர்ந்த உறக்கம், கனவிற் சோழன் வந்து கலந்த வேட்கை. இம்மூன்றும் ஒன்றுக்கொன்று பகையா யவளை உடனே எழுப்பின என்றார் வேட்கை உறக்கத்தைக் கெடுத்தது; உறக்கம் மயக்கத்தைக் கெடுத்தது என்று கொள்க. தன் நிழலைப் பார்த்தபோது குடிமயக்கத்திற் சோர்ந்து கிடந்தவள் ஆதலால், அவள் வடிவம் புணர்ச்சிக்குறி யுடையதாகப் புலப்பட்டது. கனவை நனவாக மதித்தாள்; மயக்கத்தால் பலர்க்கும் அதனையே பேசிக் குலாவியிருந்தாள்: மேகலையே உடைபோல இருக்க, உடை புடை பெயர்ந்தது; தோள் நெகிழ்ந்தது; பூமாலை நீங்கியது; சந்தனக் கோலம் அழிந்தது; செவ்வாய் விளர்த்தது; கருங்கண் சிவந்தது; வெயர்வை யரும்பியது. இவை கட்குடித்த மயக்கத்தால் சோர்ந்து கிடந்தபோது தோன்றிய மாறுபாடு, இவற்றையே புணர்ச்சியால் நேர்ந்த மாறுபாடு எனக் கண்டு மகிழ்ந்து குலவினள் என்க.