மலர்தலை
யுலகின் மல்கிரு ளகல, விலகொளி பரப்பும் ஞாயிறுபோல
மாந்தர் மனவிருளகல அறிவு பரப்புவது நம் தமிழ்மொழியாம். உயர்தனிச்
செம்மொழியெனப் பன்னாட்டினராலும் புகழ்ந்து பாராட்டும்
பெருமையுடையதும் அதுவே. நம்மொழி நூல்கள் இலக்கியம், இலக்கணம்
என இரு வகைப்படும். தொல்காப்பியம், நன்னூல் முதலியவை இலக்கண
நூல்கள். திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு
முதலியவை இலக்கிய நூல்கள். இலக்கிய நூல்களிற் பேரிலக்கியம்,
சிற்றிலக்கியம் என்ற பிரிவும் பிற்காலத்துளவாயின. பெரியபுராணம்,
கம்பராமாயணம் போன்ற புராணங்களும், நல்வழி, நன்னெறி,
நீதிநெறிவிளக்கம், நீதிநூல் முதலியனவும், வரலாற்று நூல்களும், அறநூல்,
பொருணூல், இன்பநூல், வீட்டுநூல் என்பனவும் பேரிலக்கியமாகப் பிரித்தனர்
புலவர். தெய்வங்கண் மீதும் மன்னர், வள்ளல் ஆகிய மாந்தர் மீதும்
அருள்குறித்தும் பொருள்குறித்தும் பாடிய நூல்கள் அனைத்தும்
சிற்றிலக்கியமெனச் செப்பத்தகும். புலவர் தந்நலங்கருதிப் பாடியவையாதலின்
அவை அப்பெயர் பெற்றன போலும்.
தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளனவெனப்
பேரகராதிகளிற் பெயர் காணப்படினும் சிலவே இன்று நாம் காண்பன.
கலம்பகம், தூது, பிள்ளைத்தமிழ், உலா, அந்தாதி, கோவை, பரணி போல்வன
அவை. தமிழ்ப் புலமை விழைவோர் சிற்றிலக்கியங் கற்றுப் பின்னர்ப்
பேரிலக்கியங் கற்றலே முறையாம். இளமைப்பருவத்திலிருந்தே சிறுசிறு
பொருள்களின் இயற்கையையறிந்து தெளிந்தவரே பொருளறிஞரெனப்
புகழப்படுவர். அதுபோலச் சிற்றிலக்கியங்களைக் கற்றுப்
பேரிலக்கியங்களையும் கற்றவரே பெரும் புலவரெனப் போற்றப்படுவர்
என்பது தானே விளங்கும்.
|
|
|
|