|
|
அலரறி வுறுத்தல்: |
அலர் அறிவுறுத்தல் என்பது, ஊரில் தலைவியைத் தூற்றும் அலர்விரிந்த தென்று தலைவனுக்கு அறிவுறுத்தல்.
|
| மணிவரை மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பா பணிமொழி யாளென்னுங் கொள்கொம்பு மூடிப் படர்ந்தயலார் அணிமனை தோறுங் கொழுந்துவிட் டம்பல் அரும்பிமண்மேல் தணிவில தாகவிப் போதலர் பூத்ததுன் தண்ணளியே.
|
(இ-ள்.) மணிவரை போன்ற மாளிகையையுடைய மாறை வரோதயனாகிய வாணனது வெற்பிலுள்ளவனே! நினது தண்ணளியாகிய வல்லி தலைவியென்னுங் கொள்கொம்பை மூடிப்படர்ந்து, பக்கத் தழகிய மனைதோறும் கொழுந்துவிட்டு, அம்பலென்னும் அரும்பை யரும்பி, மண்மேல் தணிவில்லாததாக இப்போது அலரென்னும் பூவைப் பூத்தது என்றவாறு.
|
மணிவரை - மாணிக்கமலை. பணிமொழி - மெல்லிய மொழி. கொள் கொம்பு - கொடிபடரக் கொள்ளுங் கொம்பு. அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று. இன்னதின் கண்ணது என்பது அயல் அறியலாகாது என்பது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடையது போலும் பட்டது என் விளங்கச் சொல்லி நிற்பது. என்னை, 1`அம்பலு மலருங் களவு` என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையிற் கண்டுகொள்க. இச்செய்யுள், `இயைபுருவகம்` எனக்கொள்க. |
(229) |
தாயறிவுணர்த்தல்: |
தாய் அறிவு உணர்த்தல் என்பது, இக்களவைத் தாய் அறிந்தாள் என்று தலைவற்குக் கூறுதல்.
|
| திரையிற் பவளம் முகத்தெழுந் தீக்கொழுந்தின் கரையிற் படருங் கடற்றுறை நாட கயற்கொடி பொன் வரையிற் றிகழ்வித்த வாணன்தென் மாறை மலர்ந்தமௌவல் விரையிற் களவையெல் லாமறிந் தாளன்னை மெய்யுறவே.
|
(இ-ள்.) பவளக்கொடி திரையால், வடவாமுகக் கனலிலெழுங் கொழுந்துபோலக், கரையிலே படருங் கடற்றுறை நாடனே! கயற் கொடியைப் பொன்மலையிலே விளக்குவித்த வாணன் தென்மாறை நாடன் த லைவிக்குச் சூட்டிய முல்லைமாலை மணத்தினாலே அன்னை களவையெல்லாம் உள்ளபடி யறிந்தாள் என்றவாறு. |
எனவே, களவொழுக்கத்தில் ஒழுகற்பாலையல்லை யென்று கூறியதாயிற்று. திரை - அலை. இன் இரண்டும் மூன்றனுருபு. என்னை, |
|
1. இறையனார் அகப்பொருள் - 22. |