|
|
அஃதாவது, பாங்கி தலைவனொடு வரைவுவறி வினாதல். |
| 1`பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென் றொருநால் வகைத்தே வரைவு கடாதல்` |
என்னுஞ் சூத்திரவிதியால் வரைவுகடாதல் நான்கு வகைப்படும். |
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்: |
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் என்பது, முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலி யறிந்தமை கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும், அதற்குத்தான் மறைத்துக் கூறியதாகவும் தலைவற்குக் கூறுதல்.
|
இக்கிளவி முதல் `கவினழி புரைத்தல்` ஈறாகக கூறிய கிளவிகள் பலவற்றுள்ளும் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவு கடாவியவாறு கண்டு கொள்க.
|
| தளரா இளமுலை தாங்ககில் லாது தளரிடைகண் வளராத தென்கங்குல் வாரா யெனத்தஞ்சை வாணன்வெற்பா விளரார் திருநுத லன்னைக்கொர் மாற்றம் விளம்பியுய்ந்தேன் உளரா மவர்வலை யுட்பட்டு வாழவ துணர்ந்தருளே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! செவிலி என்னை ஈங்கு வாராயென அருகழைத்து, எஞ்ஞான்றும் இறுகிய தன்மை தளராத இளமுலைகளைத் தாங்கமாட்டாது தளர்ந்த இடையினை யுடையாள் கங்குலின்கண் துயில் கொள்ளாதது என்னென்று வினை, வெளுப்பார்ந்த திருநுதலையுடைய அன்னைக்கு ஒரு சொல் மறைத்துச் சொல்லி உய்ந்தேன்; எமக்குள்ளாராகிய தாய்மார் வலையுள் அகப்பட்டு யாங்கள் உயிர்வாழ்தல் உணர்ந்தருள்வாயாக என்றவாறு.
|
தளரிடை - அன்மொழித்தொகை. கண்வளர்தல் - துயிலுதல். கங்குல் - இரவு. விளரார்தல் - மகட்குத் துயில் வாராமையால் யாது நோயோ என்று துன்பத்தால் திருநுதல் வெளுத்தல். ஓர் மாற்றம் - தலைவி துயிலிடைக் கனவுகண்டு வெருவி யெழுந்தாள். அவ்வச்சத்தினால் துயில் வாராதிருந்தாளென்னும ்மாற்றம். யான் இங்ஙனம் மறைத்துக் கூறாவிடின் என்னுயிர்க்கு ஏதஞ் செய்வரென்பது தோன்ற, `உய்ந்தேன்` என்று கூறியவாறு. எனவே, குறிப்பால் வரைவு கடாதலாயிற்று. `தாங்கி நில்லாது` என்று பாடமோதி, தளரிடைக்குத் துவளுமிடையென்று பொருளுரைப்பாரு முளர். |
(228) |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 49. |