ஆதியில் எடுத்துக் கோடற்கண்ணே களவு என்றும் கற்பு என்றும் கைகோள் இரண்டென வைத்து, அவ்விரண்டுக்கும் நடுவே வரைவியல் என்று கூறியதனால் முன்னதனோடு மாறுகொள்ளுமெனின் மாறுகொள்ளாது; என்னை, கற்பிற்கு நிமித்தமாய வரைவு கூறுதலான் இதுவும் கற்பின்பாற்படும். ஆயின் இதனைக் கற்பின் பாற்படுத்துக் கூறாது, வரைவியல் என வேறாகக் கூறியது என்னையெனின், வரைவு மலிவு முதலாக உடன் போக்கிடையீடு ஈறாகப் பலவகைப்பட்டு, ஒவ்வொரு வகைக்குக் கிளவிகளும் பலவாக அதிகாரப்பட்டு நடத்தலின், விளங்குதற்கு, வரைவியல் என வேறு கூறப்படும். என்னை, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி யாயினவாறுபோல, இல்வாழ்க்கையும் இல்வாழ்க்கை நிமித்தமும் ஆயவரைவும் கற்பெனப்படுமென்று உணர்க. |