பக்கம் எண் :

கட

2. இயற்கைப் புணர்ச்சி

34

 
     அஃதாவது,   தெய்வத்தாற்  கூடுதலும்  தலைவியாற்  கூடுதலும் என  இரு
வகைப்படும். செய்யுட்பாடுவார்  தெய்வப் புணர்ச்சி   பாடுவாருமுளர்; தலைவியிற்
புணர்ச்சி பாடுவாருமுளர்; இவ்விரண்டிற்கும் இயற்கைப்  புணர்ச்சியென்று   பெயர்
கூறப்படும்.  அவற்றுள்  இச்  செய்யுள்  தலைவியிற்  புணர்ச்சியாய   இயற்கைப் புணர்ச்சி1  என்க.

  2`வேட்கை யுணர்த்தல் மறத்தல் உடன்படல்
கூட்டமென் றிறைவியிற் கூட்டநால் வகைத்தே`

என்னுஞ் சூத்திரவிதியால், இயற்கைப்புணர்ச்சி நான்கு வகைப்படுமெனக்  கொள்க. அவை வருமாறு:

இரந்து பின்னிற்றற் கெண்ணல்:

     இரந்து  பின்னிற்றற்  கெண்ணல்  என்பது, தலைவன் தலைவியை   இரந்து
பின்னிற்றற்  கெண்ணல்.  பின்னிற்றல்  என்பது ஒரு சொல். அதற்குப்   பொருள்
இதஞ்சொல்லுதல்.

தேங்கிய காதர வாதரஞ் செப்பித்தண் செப்பிணைபோல்
வீங்கிய மாமுலை மேவுதும் யாம்விச யக்கொடிமேல்
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர்வென்ற வாணன்வையம்
தாங்கிய மாலனை யான்தஞ்சை சூழ்வரைத் தாழ்குழற்கே.

     (இ-ள்.) நெஞ்சமே,   வெற்றிக்கொடிமேல்  வளைவில்லை  யுயர்த்தவனாகிய சேரனது  போரை  வென்ற  வாணன்  வையந்தாங்கிய  மாலுக்   கொப்பானவன்.
தஞ்சையைச்  சூழ்ந்த வரையிலிருக்குந் தாழ்ந்த குழலினை யுடையாட்கு  நிறைந்த
அச்சந்தரும்  ஆதரத்தைச்  சொல்லி, தண்ணிய செப்பிணைபோற் பூரித்த பெரிய
முலையிடத்து யாம் கூடுதும் என்றவாறு.

     காதரம் - அச்சம்; வடசொல்.       ஆதரம் - காதல்.        தாழ்குழல்:
அன்மொழித் தொகை. நெஞ்சம்: முன்னிலையெச்சம். (5)

இரந்து பின்னிலை நிற்றல்:

     இரந்து பின்னிலை நிற்றல் என்பது, தலைவியை யிரந்து   இதஞ்சொல்லுதல், நிலையாகப் பின்னிற்றல் என்று மாறிக் கொள்க.


     (பாடம்) 1. என்று கொள்க.
      2. அகப்பொருள் விளக்கம், களவியல் - 10.