|
|
நின்னையொப்பவள், அவளை மறைய வைத்து நின்னை அவளென்று காட்டலாமென்று எல்லாருஞ் சொல்வர்; அலரினின்றுந் தேன்குதிக்கப் புதுநீர் வந்ததென்று தவளை குதிக்கும் பெரிய பொய்கை சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பிலிருக்கும் மலையணங்கே, எங்கள் தலைவி வருமளவும் இருந்து அவளை யொப்புக்கண்டு பின்னை நீ யெழுந்தருள்வாய் என்றவாறு.
|
| 1`கிளந்தவல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே`
|
என்னும் மயங்கியற் சூத்திரத்தில் அன்னம் போல்வாளை அன்னம் என்றும், யானை போல்வானை யானை யென்றும் கூறினமையான் இவ்விடத்துங் குவளை போன்ற கண்ணைக் குவளையென்றும், குமுதம் போன்ற வாயைக் குமுதம் என்றும் ஆகுபெயராகக் கூறியவாறு உணர்க.
|
`மலர்த்தேன்` என்புழி ஐந்தனருபு தொக்கது. தடம் பொய்கை - பெரிய பொய்கை. அணங்கு - தெய்வப்பெண்.
|
மனத்தில் தலைவிதான் என்று அறிந்துவைத்து வாயுரையில் அணங்காகக் கூறினமையின், பொய்யினாற் பல்வேறு கவர் பொருள் சொல்லி நாடலாயிற்று. `கவர்பொருள்` என்னாது `பல்வேறு கவர்பொருள்` என்றது என்னையெனின் ஒன்றல்ல வெல்லாம் பலவாதல் தமிழ்நடையாதலின் என்றுணர்க. இவையிரண்டும் நாணநாட்டம். |
(67) |
நடுங்கநாட்டம்: |
நடுங்கநாட்டம் என்பது, தலைவியை நடுங்கத்தக்கதாக நாடுதல். |
| பால்போல் மொழிவஞ்சி யஞ்சிநின் றேனிந்தப் பார்முழுதும் மால்போற் புரந்தவன் மாறை வரோதயன் வாணன்வென்றி வேல்போற் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய கோல்போற் கொடியன வாங்கொலை யானையின் கோடுகண்டே.
|
(இ-ள்.) பால்போலும் மொழியையுடைய வஞ்சிக்கொம்பு போல்வாய்; இந்தப் பாருலகுமுழுவதையுந் திருமால்போல் இடையூறு நீக்கிக்காத்த மாறை நாட்டில் வரோதயனான வாணனது வென்றிவேல் போல் குருதியளைந்து சிவந்து நெறி முறைமை வழுவிய வேந்தனது கோடுங்கோல் போல யார்க்கும் அச்சங் கொடுக்குங் கொடுமையவாகிய கொலைத்தொழில் செய்யும் யானையது கோட்டைக் கண்டு அஞ்சி நின்றேன் என்றவாறு.
|
|
1. தொல். சொல். வேற்றுமை மயங்கியல் - 34. |