பக்கம் எண் :

108

     வரலாறு :- கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை
அரைய நாட்டில் வடகரை ஆற்றூரிலே வேட்டுவரில் இம் முடித்திருமலை
அல்லாள இளைய நாயக்கன் என ஒரு தக்கோன் இருந்தான் அவன்
திருச்செங்கோடு ஸ்ரீநாகேசுரர், அர்த்தமண்டபம் மஹாமண்டபம் முதலிய
திருப்பணிகள் செய்தான். கோயிற்கற்பணி வேலை மிகச் சிறந்தது எனலாம்.
மைசூர்ப் பெருங்கலக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சய உடையார்
அர்த்தநாரீசுரர் ஆலயத்திற்கொள்ளை அடித்துக்கொண்டு போனான்;
என்றாலும் ஆறைஇளையா நாயக்கன் பலத்த சேனையுடன் சென்று
அவர்களை வழிமறித்துக் கொள்ளைப் பொருள்ளைப் பிடுங்கிக் கொண்டு
வந்து சேர்த்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான்.
சாலிவாக சகாப்தம் 1565 தாரண ஐப்பசிமாதம் 25 தேதி (கி. பி. 1643)
நாகேசுரர் கோயிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின்
வடபுரம் அணையின்றி வாய்க்கால் பிரித்துப் பாசன வசதி செய்திருக்கிறான்.
இவ்வாய்க்காலை ராஜ வாய்க்காலென வழங்குகிறார்கள். முற்காலத்தில் ராஜ
ராஜன் ஆட்சியில் வெட்ட ஆரம்பித்திருக்கலாம் என்று சிலர்
எண்ணுகிறார்கள். இவன் மரபினருக்கு இவ்வாய்க்காலில் மரியாதை உண்டு
என்பதன்றிக் கபிலைமலை முதலிய தேவஸ்தானமுள்ள கீழ்கரை அரைய
நாட்டிலெல்லாம் முதன்மை இருக்கிறது.

                         (மேற்)

மூவருக்கு மகத்தியமா முனிவருக்கு மரசிருந்த முன்னை யோர்க்குந்
தேவருக்குந் திரும்பாத காவிரியைக் கொங்கேற்றித் திறை கொண்டாயே
பூவிருக்கு முரமாயன் கடலடைத்தா னவன்வேடன் புனைந் தவாறோ

யாவருக்கு மிளையானே யல்லாள திருமலையா வீகையோனே

     திருச்செங் - திருப் - மாலை 262 செய்யுள் முதல் 268 வது செய்யுள்
வரை நோக்குக. கபிலை மலைக்குழந்தைக் குமாரர் வருக்கக்கோவை 77-வது
செய்யுளில் இவன் புகழப்படுகிறான். இந்நூல் கலி 4740-ல் (கி. பி. 1640)
அரங்கேற்றப் பெற்றது. சென்னை (சாசன பரிசோதக) ஆர்க்கலாஜிகல் 1907
- 1908 வருஷாந்த ரிபோர்ட்டு 2-வது பிரிவு 16-வது பக்கத்து இவன் குறிப்பு
இருக்கிறது.