வாலசுந்தரக்
கவிராயர் இயற்றிய
கொங்கு
மண்டல சதகம்
ஆய்வு
முன்னுரை
வித்துவான்
வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்
கொங்கு
மண்டல சதகத்தின் முன்னுரையாகவுள்ள இக்கட்டுரையில்
கொங்குமண்டலம் பற்றியும் அதன் தொடர்பான பதிகம் பற்றியும் பதிப்புப்
பற்றியும் சில கூறுவாம்.
தமிழ்
நிலம் தொன்மை தொடங்கிச் சேரநாடு, சோழநாடு,
பாண்டியநாடு என்னும் மூன்று பெருவள நாடாகவும், குறுநில மன்னர்கள்
பலரின் ஆட்சிக்குட்பட்டுக் கொங்குநாடு தொண்டைநாடு என்னும் இரண்டு
தனி நாடாகவும் திகழ்கின்றது, இந்நாடுகள் ஐந்தனுக்கும் எல்லை கூறும்
பழமையான தமிழ்ப் பாடல்களும் உள்ளன.
பெயர்க்
காரணம்
கொங்குநாடு
என்பது கொங்கு என்னும் தலைநகரத்தாலமைந்த
பெயராகும் என்பது என்னுடைய கருத்து. அத்தலைமை சான்ற கொங்கு
நகரம் யாதோவெனில் தாராபுர வட்டத்தையடுத்து விளங்கும் வைகாவூர்
நாட்டுச் சிற்றாற்றங்கரையிலுள்ள கொங்கூர் என்னும் பழமை சான்ற
மூதூராகும். அது தற்காலம் பழம்பெரும் நத்தத்தின் நடுவில் நத்தை
தின்னும் பழங்குடி மக்கள் வாழும் சிற்றூராகக் காட்சியளிக்கின்றது. அது
முன்பு பேரூராக விளங்கியதற்குரிய சின்னங்கள் சிலவற்றையுடையது. அது
புதைபொருளாராய்ச்சிக்குரிய இடமாக ஆங்கில ஆட்சியாளர் காலத்திற்
சில காலமிருந்தது. மிகவும் தொன்மையான சேய்மைக் காலத்தில் சேர
வேந்தர் இந்நாட்டைக் கைப்பற்றியபொழுது கொங்கு என்னும் இந்நகரின்
தலைமை இதன் அண்மையிலுள்ள தாராபுரத்திற்கு மாறுவதாயிற்று.
அதனால் தாராபுரம் கொங்குவஞ்சியெனப் பெயர் பெறுவதாயிற்று.
இப்பெயர் தாராபுரக் கல்வெட்டொன்றிலும் கொங்குநாட்டுக்
காணிப்பாடலொன்றிலும் காணப்படுகின்றது. முதலிக் காமிண்டன்
தனிப்பாடல் முதலியவற்றில் கொங்கு தாராபுரம் என்னும் பெயர்
காணப்படுகின்றது. இப்பெயர் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வழங்கிய
பெயராகத் தெரிகிறது. பின்பு வந்த கொங்குச் சோழர்களும் கங்கர்களும்
முறையே ராஜராஜபுரம், ஸ்காந்தபுரம் என்ற
|