பக்கம் எண் :

144

பெயரால் தாராபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்து
வந்திருக்கிறார்கள். சேரன் கொங்கு நாட்டை அகப்படுத்திய காலத்தில்
அதனைத் தனக்குரியதாகக்கொண்டு கொங்கன் என்னும்
பெயருக்குரியவனாயினான்.

பிரிவுகள்

     கொங்குநாடு காவேரியை நோக்கி மேல்கொங்கு, மழகொங்கு
(கீழ்கொங்கு), வடகொங்கு, தென்கொங்கு என்னும் பிரிவுகளையுடையதாய்
விளங்கிற்று. கொங்குநாடு 24 கிளை நாடுகளுடையதாய்க் கொல்லிமலை
வெள்ளிமலை, தலைமலை, வராகமலை யென்னும் நான்கு
மலையெல்லைக்குட்பட்டு விளங்குகிறது. கொங்கு இருபத்தினான்கு
நாடுகளையும் கூறும் தனிப்பாடல்கள் இரண்டுள்ளன. ஒன்று பூந்துறை
முதன்மையில் வைத்துக் கூறுவது. மற்றொன்று தென்கரை நாட்டை
முதலில் வைத்துக் கூறுவது.

திருமருவு புகழ்கொங்கு மூவாறு கோட்டமும்
     தென்கரை நாலாறு நாடு
தென்கரைசை பூந்துறைசை யாறுதன் தலைசையும்
     செயகாங்கை வேங்கை தட்டை
மருவுலவு அண்டையும் திருவாவினன்குடி
     வாரக்க மானை மலையும்
மதுசொக்க நல்லூரும் பொங்கலூர் நறையனூர்
     வடகரை யொடுவங் கமும்
அருள்பரவு காவடி குறிப்பைபூ வாணியும்
     அன்று புகழ்ராசி புரமும்
அரையமண நாடு கிழங்குவாழ் வந்தியும்
     ஆகநா லாறுநாடு
குருவருள் முந்நூற்று எண்பது சிவாலயங்
     கொங்கேழு தேவர் சபையும்
கொல்லிமலை வெள்ளிமலை தலைமலை வராககிரி
     கொழித்துலவு கொங்குநாடே.

என்பது நாட்டுப்பாடல்.

இலக்கிய வழக்கு

     பழமையான சங்க நூல் முதலியவற்றில் கொங்குநாடு வழங்கப்படுவது காணலாம்.

"கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே" புறம் 373