பக்கம் எண் :

149

உடையவனாதலினாலும் திருமாலைப் போலத் திருவுடையானாய்
வாழ்ந்தமையினாலும் 'வெண்ணையுண்டு மண்ணையுமுண்டவன்' எனவும்
"அசோதைக்கு மைந்தன் மண்ணையும் வெண்ணையுமுண்டவன்" எனவும்
இந்நூலில் திருமாலாகவே போற்றிக் கூறப்படுகின்றான்.

     மற்றும் இந்நூலிலிருந்து சடையன் கொங்கு நாட்டு வேளாளரால்
வாழ்த்தப் பெற்றவன் என்பதும் இவன் செய்வித்த இராமாவதாரம் கொங்கு
நாட்டில் மிகவும் போற்றப்பட்டது என்பதும் இந்நூலில் வரும் சில
செய்யுட்களால் தெரியவருகின்றது.

     "மண்ணையுண்டு வெண்ணையுமுண்டவன் பாதம்வைத்தான் கொங்கு
மண்டலமே" எனவும், "பண்ணைகுலாதிபவன் தொண்ணூறு மாறும் பரவுபுகழ்,
மண்ணையும் வெண்ணையுமுண்டவன் வாழ் கொங்கு மண்டலமே" (101)
எனவும் கூறப்படுவதால் வெண்ணைநல்லூர்ச் சடையன் கொங்கு நாட்டிற்கு
வந்து சிலநாள் வாழ்ந்து சென்றவன் என்பது தெளிவாகின்றது.

நூலினுட் பொருள்

     ஆசிரியர் இந்நூலில் கொங்கு நாட்டிற்குரிய தலங்கள், மலைகள்,
ஆறுகள், அறச்செயல்கள், பாரதச் செய்திகள், ஐதிகங்கள், அதிசயங்கள்
முதலியவற்றை நன்கு பாடியிருக்கின்றார். சோழமண்டல சதகம்,
தொண்டைமண்டல சதகம், கார்மண்டல சதகம், மிழலைச் சதகம், முதலியன
போல இந்நூலாசிரியர் இந்நூலிலும் வேளாளரிற் சிறப்புடையராய்
வாழ்ந்தவர்களையும் தமிழுக்குத் தொண்டு செய்தோரையும் பற்றி நன்கு
அறிந்து பாடியிருக்கின்றார். அவற்றுட் சில காட்டுதும்:

வரலாறு கூறப்பெற்ற தலங்கள்

     ஈரோடை, மோகனூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, நண்ணாவூர்
(பவாநி,) நட்டாற்றீசுவரர் கோவில், பேரூர், திருவாவினன்குடி, கொற்றைநகர்,
அப்பரமேயதலம், பாப்பினி, கரூர் முதலியன.

விசேடம் கூறப்பெற்ற மலைகள்:

     திருச்செங்கோடு, பழநிமலை, ஐவர்மலை, புகழ்மலை, காந்தமலை,
மருதமலை, ஊதியூர்மலை, சென்னிமலை, தொண்டாம் புத்தூர் மலை,
கொல்லிமலை முதலியன.