பக்கம் எண் :

155

               கொங்கு மண்டல சதகம்

                   பாயிரம்

                    காப்பு

        (அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

1.பூரண மதியும் கொன்றைப் பொருனையுங்
     கொல்லி வேந்தன்1
காரணப் பொருப்பும் வேரிக் கான்றுள
     வணிந்த மார்பன்
நாரணன் புகழெண் ணாறா யிரங்குடி
     நலமு மோங்கும்
வாரண முகவன் கொங்கு மண்டலங்
     காப்புத் தானே.

     (குறிப்புரை) பூரணமதி - முழுநிலவு, நாட்டிற்கு அழகும்
குளிர்ச்சியும் தருவதாகலின் பூரணமதி என்று அதனை முற் கூறினார்.
"தாரகை கொண்கன் சீதளவின்பந்தருநாடு" என்பது அவிநாசிப் புராணம்.
(சுந்தரச்சருக்கம் - பா249) கொன்றைப் பொருனை - கொன்றைமலர்
நிறைந்த ஆம்பிராவதி நதி. கொன்றை கொன்றையாறு எனினும் ஆம்.
கொல்லிவெற்பன் எனச் சேரனுக்குக் கொல்லி மலை யுரியதாகக்
கூறப்படுதலின் கொல்லிவேந்தன் காரணப் பொருப்பும் என்றார். 'நீவிரே
விளைச்சலையுண்டாக்கி நாடு காத்தற்குரியவர்' என்று திருமாலால்
புகழப்பெற்றவராதலின் 'நாரணன் புகழெண்ணாறாயிரங்குடி' என்றார்,
வாரணமுகவன் - விநாயகக் கடவுள். கொங்கு மண்டலம் - கொங்கு
மண்டலசதகம் - ஆகுபெயர். ஓங்கும் கொங்குமண்டலம் வாரண முகவன்
காப்பு எனக் கூட்டிப் பொருள் கொள்க.

                 அவையடக்கம்

2.கற்றவர் தேவர் தேவர் கவிக்கடல்
     கற்றோர் முன்னே
சிற்றெறும் பதுநீர் கீறிச் சிந்துவை
     நீந்து மொப்பாய்ப்
பெற்றவர் பிள்ளை தன்னைப் பிறப்பினில்
     விலக்கா ரென்று
கொற்றவர் தேவர் போற்றுங் கொங்குமண்
     டலஞ்சொன் னேனே.


     1. கொல்லியேந்தும் - பிரதிபேதம்