பக்கம் எண் :

159

வழக்கம். அவள் ஒரு நாள் வழக்கப்படி சென்று தயிர் விற்றுவிட்டு ஒரு
வில்வக் காட்டின் வழியே வந்தாள். அவ்வழியில் 'எனக்கு ஒரு விளக்கு
வை' என்னும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தாள். ஒருவரையும்
காணாமையால் திரும்பிப் புறப்பட்டாள். மற்றும் இரு முறை அவ்வொலி
கேட்டது. அங்கு யாரும் தென்படவில்லை. பின் அவ்வொலி வந்த
தென்திசை நோக்கி அவ் வில்வக் காட்டினுள் சென்றாள். அங்கு ஒரு
சிவலிங்கம் இருந்தது. அவ்விலிங்கத்தைக் கண்டு அதிசயம் அடைந்த
குமரி சிவலிங்கப் பெருமானிடம் அன்புகொண்டு அன்றைய தினம்
முதல் நாள்தோறும் தயிர்விற்கும் பாவனையிற் சென்று மாலை நேரத்தில்
விளக்கேற்றி வைத்து அச்சிவலிங்கப்பெருமானை வழிபட்டு வந்தாள்.

     அவள் சிறிது நாளில் கர்ப்பம் உற்றாள். அது கண்ட அவ்வூரார்
நெடுநாளாகக் கர்ப்பம் அடையாதிருந்த இவள் இப்பொழுது கர்ப்பம்
அடைந்ததற்குக் காரணம் நாள்தோறும் மாலைநேரத்தில் வில்வக்
காட்டினுள் சென்று விபச்சாரம் செய்ததேயாகும் என்று தீர்மானித்தனர்.
ஒருநாள் அவ்வூரார் உண்மையையறிவதற்காக அவள் விளக்கு வைக்கச்
செல்லும் மாலைநேரத்தில் அவள் அறியாதபடி அவளைப்பின் தொடர்ந்து
சென்றார்கள். அவள் சிவலிங்கப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டாள்.
பெருங்காற்று அடித்தது. தீபம் அசையாமலும் அணையாமலும் சுடர்விட்டு
எரிந்தது. அதனைக் கண்டவர் எல்லோரும் அதிசயம் அடைந்து அவளை
மிகவும் பாராட்டினர். சிவலிங்கப் பெருமானுக்குக் கோயில் எழுப்பி
வழிபட்டனர். குமரி பூசித்ததால் 'குமரீசுவரர்' என்றும், காற்றில் விளக்கு
அசையாமல் இருந்ததால் 'அசலதீசுவரர்' என்றும் சிவபெருமானுக்குப் பெயர்
உண்டாயிற்று என்பது தலச்செய்தி. குமரிக்கு மகவு அளித்ததால் 'மகவனூர்'
என்று பெயராயிற்று. அதுவே "முகவனூர்" என்றும் "மோகனூர்" என்றும்
திரிந்து வழங்குகின்றது என்று கூறுவர். 'செந்நெல் செறி முகவனூர்' என்பது
மணிய குலக்காணிப் பாடல். இத்தலம் நாமக்கல் வட்டத்தில் காவிரிக்
கரையையடுத்துள்ளது. இத்தலத்து முலைப்பால் சுரந்து அருவியாகக்
காவிரியில் கலப்பதால் அங்குள்ள காவிரித்துறைக்கு 'குமரித்துறை' என்று
பெயர் ஆயிற்று என்பர். இத்தலத்து அம்மனுக்கு 'தேனாயி' 'குமரியம்மன்'
என்னும் பெயர்கள் வழங்குகின்றன. இதற்குரிய வடமொழித் தலபுராணத்தில்
'மதுகர வேணி' என்று அம்மனுக்குப் பெயர் கூறப்படுகின்றது. அப்பர்
தேவாரம் க்ஷேத்திரக் கோவையில் 'குமரி கொங்கு' என்றும்
திருக்குறுந்தொகையில் 'கொங்கு தென்குமரித்துறை' என்றும் வருவன காண்க.