பக்கம் எண் :

161

ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான்
பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி
உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது.
பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே கூறுவது உண்டு.
சேரநாட்டில் நடந்ததையும் கொங்கு நாட்டில் நடந்ததாகவே கூறுவர்.

'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே
                                    முன்நாளினில்,
     ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி
ஆதியந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர்
                                    நன்நாடதனில்
     ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே.

(திருப்புகழ் - பழநி)

என்பது இத்தகையதே.

     அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய்
கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப்
பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து
சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும்
எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று
குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.

             மாண்ட குதிரை உயிர்பெற்றது     

9.நீண்டபுகழ்வயி ரம்பள்ளிப்பொய்கை நெடுவயலில்
தாண்டு வளர்நெற் கதிர்மேயக் கண்டு சபித்துக் கொன்ற
ஆண்ட சிவன்அரு ளால்கவி பாடிப்பொய் யாமொழியார்
மாண்ட குதிரை உயிர்மீட் டதுங் கொங்கு மண்டலமே.

     (கு - ரை) பொய்யா மொழிப் புலவர் இளமையில் கல்வி
பயிலும் போது ஆசிரியரின் நெல்வயலைப் பாதுகாக்க அனுப்பப்பட்டார்.
வெயில் மிகுதியாக இருந்ததால் களைத்துப்போய்ப் பக்கத்தில் இருந்த
காளிகோயிலில் படுத்து உறங்கிவிட்டார். குதிரை ஒன்று வந்து வயலில்
வளர்ந்திருந்த நெற்கதிர்களை மேய்ந்தது. எழுந்து பார்த்து நெற்கதிர்களைக்
குதிரை மேய்ந்து விட்டதால் ஆசிரியர் தண்டிப்பாரே எனப்பயந்து
காளிகோயிலைப் பார்த்து அழத்தொடங்கினார். காளிதேவியின்
திருவருளால் கவிபாடும் திறமைபெற்றார்.