பக்கம் எண் :

162

'வாய்த்த வயிரபுர மாகாளியம்மையே
ஆய்த்த வருகார் அணிவயலில் - காய்த்த
கதிரை மாளத்தின்னும் காலிங்கன் ஏறும்
குதிரைமாளக் கொண்டு போ'

என்று பாடியதும் குதிரை கீழே விழுந்து இறந்தது. அங்குவந்த ஆசிரியர்
இறந்த குதிரை அரசர்க்கு உரியது என்று உணர்ந்து மிகவும் பயந்து
நடுங்கினார். அதனைக் கண்ட பொய்யாமொழியார் 'குதிரை மீளக் கொண்டு
வா' என்று ஈற்றடியை மாற்றிப் பாடியதும் குதிரை உயிர்பெற்று எழுந்தது.
திருவாளர் தி. அ. முத்துசாமிக் கோனார் அவர்கள், கார்மேகக் கவிஞர்
கொங்குமண்டல சதகத்தில் (பா - 47) இவ்வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யாமொழிப் புலவர் சிவன் அருளால் கவிபாடி மாண்ட குதிரையை
உயிர் மீட்டதாகக் குறிப்பிடுவதால் காளியின் அருளால் கவிபாடும் திறமை
பெற்றுக் கவிபாடி மாளுமாறு சபித்தபின் இறைவன் அருளால்
அக்குதிரையின் உயிரை மீட்டார் எனக் கொள்ளலாம்.

                சாம்பல் மலையானது

10.அலையாடும் பூம்புனல் மேவிய காவிரி ஆற்றருகே
நிலையான வேதகிரி என்ப தேனினி நித்தநித்தம்
தலையான மாதவ நாரதர் வேள்வியில் சாம்பல் கொட்டி
மலையாய் வளர்ந்தது நண்ணாவூர் சூழ்கொங்கு மண்டலமே

     (கு - ரை) நண்ணாவூர் - இது காவிரியும் பவாநியும் ஒன்று
கூடுகின்ற இடம் ஆதலின் 'பவாநிகூடல்' எனப் பெயர் பெற்றது.
திருநணாவென்று திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்
கூறுகின்றது. நண்ணா என்பதற்குத் தன்னையடைந்தோருக்குப் பிறவி நோய்
நண்ணாதது என்பது பொருள்.

     வேதகிரி என்பது பவாநியின் வடக்கில் சுமார் மூன்று கல்
தொலைவில் உள்ள ஊராட்சிக் கோட்டை மலையாம். வேதவியாசர்
சிவபெருமான் கட்டளையின்படி இம்மலையில் அமர்ந்து தலைதடுமாறிக்
கிடந்த வேதங்களை அனுவாகம், காண்டம், பிரச்சின்னம் என மூன்றாகப்
பிரித்து அவற்றை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்காக
வகுத்துப் பிராமணர்களுக்குக் கொடுத்தார், ஆதலின் அம்மலை வேதகிரி
எனப் பெயர் பெற்றது என்பது தலபுராணம். நண்ணாவூர்ப் புராணம்
வேதகிரி மகிமைச் சருக்கம் காண்க.