பக்கம் எண் :

193

                  முளைவாரியமுதிட்டது

(81)குடகரி தன்னில் வருமாரி பெய்யக் குளிர்மழையால்
முடுகிடுஞ் செந்தமிழ் வாணருக் கேமுளை வாரிமுன்னாள்
அடகர் குலாதிபன் காலிங்க நல்லண்ண னன்னமிட்டு
வடகர் பதிபுரம் பேறுபெற் றான்கொங்கு மண்டலமே.

                  சோழனுக்கு ஆடைகீறிச்
     
                சிலந்தியாற்றியது

(82)பூந்துகி லாடையைக் கீறிச் சிலந்தியைப் பொற்கரத்தால்
வேந்தன்முன் காட்டி நிலைமைகொண் டான்வித்து வான்களுக்கு
ஆந்தை குலாதிபன் குழந்தைநல் வேல னமுதமுண்டு
வாழ்ந்தினித் தேவ ரனைவோரும் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) ஆந்தை குலத்தில் பிறந்த குழந்தை வேலன் என்பவன்
தமிழ்ப் புலவர்களையாதரித்து வாழ்ந்தவன். அவன் குலோத்துங்க
சோழனுக்குத் தொடையில் வந்த சிலந்தியைச் சோழனுக்கு மானம்
குறையாமலிருக்கும்படி அவனது ஆடையைக் கீறிக்காட்டியாற்றினான்.

"ஆறாத் தொடையிலெழு சிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
 புடவை கிழித்த பெருங்கை"

                    (கம்பர் திருக்கை வழக்கம் - 19)

"சூடுமந்தச் சோழன் தொடைமானங் காணாமல்
 ஆடை கீறிச்சிலந்தி யாற்றுவித்தோம்"

                            (மேழி விளக்கம் - 192)