கொங்கு மண்டல ஊர்த்தொகை
முகவுரை
தமிழ் வழங்கும்
நிலமானது முடியுடைவேந்தர் மூவர்க்கும் உரிய
என்பதால், கீழ்கடல் சோழனுடையதும், தென்கடல் பாண்டியனுடையதும்,
மேல்கடல் சேரனுடையதும் ஆம். கொங்கு சேரனைச் சார்ந்தது. அது
ஒரு சேரனது இரண்டு மக்களுள் இளையவனுக்குக் கீழ்ப் பகுதியைப்
பிரித்துக் கொடுத்தான். அப்பகுதிதான் கொங்குமண்டலம்1 என்கிறார்கள்.
இதற்குப் போதிய ஆதரவு இன்னுங் கிடைக்கவில்லை. வெகு காலமாகக்
கொங்கு என்பது தனி நாடாக இருந்திருக்கிறது. சங்க நூல்களுள்ளுஞ்
சேரரென்றுங் கொங்கரென்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது. 2-ஆம்
நூற்றாண்டிலிருந்த செங்குட்டுவன் "கொங்கர் செங்களம் வேட்டான்"
என்றிருத்தலானும், கொங்கிளங்கோசர் கண்ணகைக்கு விழா
நடத்தினானென்றிருத்தலானும், பெருஞ் சேரலாதன் தகடூர் பெற வேண்டி
அதிகமானிடம் போர் புரிந்திருத்தலானும், கொல்லிமலையைப் பெறக்கருதி
மலாடு நாட்டு அதிபனான காரியை வேண்ட அவன் வல்வில் ஓரியைப்
போரில் வென்றபின் கொல்லிமலையைப் பெருஞ்சேரல் இரும்பொறை
பெற்றிருத்தலானும், அதிகமானுக்குத் துணையாகச் சேரரும் வந்து
தோற்றோடினரென்று காணப்படுகின்றமையானும் ஏறக்குறைய ஓராயிர
ஆண்டினிடையில் சேரராதிக்கத்திற் கொங்குமண்டலமிருந்ததாக
விளங்கவில்லை. பின்பு ஏகதேசம் ஒன்பதாம் நூற்றாண்டினின்று
சோழவரசாட்சியிலும், பின்பு பாண்டியர் ஆளுகையிலும் கொங்கு நாடு
இருந்திருக்கிறது. ஆதலின் சேரர் பெயர் பொறித்த சாசனங்கள்
கொங்குநாட்டில் அகப்படுவதில்லை.
சேலம் ஜில்லாவின்
தென்பகுதியும், கோயமுத்தூர் ஜில்லாவும்,
மதுரை ஜில்லாவிற் சிறு கூறுஞ் சேர்ந்தது கொங்கு ராச்சியம்.
ஸ்காந்தபுரத்தை ராஜ தானியாகக் கொண்டு கி.பி. 190-லிருந்து 9-ஆம்
நூற்றாண்டு வரை கொங்கு அரசர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்
என்பது இப்போதைய சரித்திரக்காரர் கருத்து. கர்னாடக தேசம் பிடிபட்ட
பிறகு இப்போதைய மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி வரையில் வடக்கே
நகர்ந்தது. பொன்னாடு முதலிய சிறிய நாடுகள் அவநிதன் என்பவனாற்
பிடிக்கப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குள் வடக்கே நந்திதுர்க்கம்
வரையிலும், ஆறாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னும் நகர்ந்தது.
8-ம் நூற்றாண்டில் துங்கபத்திரை நதிவரை பரவிற்று. 1 மண்டலம் என்பது
ஒரு தேசத்தினின்று பிளவுற்றது.
|