பக்கம் எண் :

206

     8-ஆம் நூற்றாண்டிலேயே சோழவேந்தர் ஆதிக்கத்துக்குட்பட்டது.2

     காவேரி நதியின் வடபாகம் (சேலம் ஜில்லா) வட கொங்கு என்றும்,
தென்பகுதி, தென்கொங்கு என்றும், மேல்பகுதி மேல்கொங்கு என்றும்
வகுக்கப்பட்டது. இவைகள் 24 நாடுகளாகப்3 பிரிக்கப்பட்டன. இந்த
இருபத்துநான்கு நாடுகள் சில சமயங்களில் பலவிதமாகப் பிரிக்கப்பட்டும்,
உபநாடுகள் அமைக்கப்பட்டும், பின்பு சேர்க்கப்பட்டும் வந்தனவாகத்
தெரிகின்றன. குன்றத்தூர் (சங்ககிரி துர்க்கம்) கூற்றம் - தாராபுரக் கூற்றம் -
தணாக்கன் கோட்டைக்கூற்றம் என்றும் வகுத்து விஜயநகரராயர் காலத்தும்
மதுரைநாயக்கர் காலத்தும் ஆளப்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

     கொங்கு மண்டல சதகத்துள் காணப்படுங் கதைகள் நிகழ்ந்த ஊர்கள்,
இந்நாட்டினுட்பட்டது என்பது எளிதிற் கண்டுகொள்ளும் பொருட்டாக
இவ்வூர்த்தொகை இதன் அநுபந்தமாகச் சேர்த்தது. இவற்றை அறிதற்காக
ஒவ்வொரு நாட்டிலும் புகுந்து அந்த அந்த நாட்டைச் சார்ந்த ஊர்களைக்
காட்டும் பாட்டுகளைக்கண்டும். பாட்டு அகப்படாத நாட்டின் ஊர்களை
ஆதாரத்துடன் தேடிப் புதிய பாட்டுகளியற்றி * இவ்வித அடையாளக்
குறிப்பிட்டும் இத்துடன் சேர்த்துள்ளேன். இதில் நாட்டின் எல்லைகளிலுள்ள
ஊர்கள் சிலவற்றை இரு நாட்டினுஞ் சேர்த்திருக்கிறார்கள். பல பழைய
நூல்களிற் கூறும் ஊர்கள் மறைந்து போயின. சில பழம் பெயர் மாறியும்
பிற்காலத்து விடுபட்டுமிருக்கின்றன புதிய ஊர்களைச் சேர்த்தும்
எண்ணுவோருமுண்டு. இதிற்பல தவறுகளிருக்கவுங்கூடும். இப்படி நேர்வது
இயல்பு என்று பொறுமை கொண்டு ஆன்றோர் தெரிவிப்பின்
வந்தனத்துடன் ஏற்றுக் கொண்டு மறுபதிப்பில் திருத்தமாக வெளியிடுகிறேன்.
இம்மண்டலத்துப் படம் (Map) ஒன்று எழுதுவித்து இதன் இறுதியில் வைக்க
முயற்சிசெய்தேன், சில பெரியோர்கள் விரைவில் வெளியாக்கக் கருதுவது
கண்டு மறுபதிப்பிற் சேர்க்கலாமென்று நிறுத்திவிட்டேன்.

     நாடு - ஊர் - கதைகள் தெரிதற் பொருட்டு இம்மண்டலத்திற் சென்ற
காலங்களில் அங்கங்கே போதுமான சௌகரியங்களைச் செய்து கொடுத்த
நண்பர்களின் அபிமானத்தை ஒருநாளும் மறப்பேனல்லேன்.

திருச்செங்கோடு     தி. அ. முத்துசாமிக்கோனார்.
1 - 1 - 23


2 அங்கங்கு இவர்கள் தானஞ்செய்த நில சாசனங்களிருக்கின்றன.
3 சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தின் முன்னரே பிரிக்கப்பட்டது.
"கொங்கிற் குறும்பிற் குரக்குத்தளியாய்" தேவாரம்.