முன்னுரை

கொங்கு நாடு தனி நாடாக இருந்ததைத் தண்டமிழ் இலக்கியங்களால்
அறிகின்றோம். கொங்கரும், கோசரும், வேளிரும், கொங்குக் குடபுலவேந்தர்
சேரரும் பழந்தமிழ்ப் புலவரால் போற்றப்பட்டுள்ளனர். தெய்வ மணங்கமழ்
காஞ்சியும் வானியும் ஆண்பொருனையும், மலைத்தலங்களும், பண்டைய
நகரங்களும், வள்ளல்கள், மற்றும் அவர்தம் நாட்டெல்லைகளும் பண்டைய
நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன.

பழங்காலக் கொங்கு, மழகொங்கு, குடகொங்கு, வடகொங்கு என்ற
பிரிவுகளை யுடைத்தாய் இருந்தது. 'கொல்லிக் கூற்றம்' என்ற தொடர்
அக்காலத்தில் நாடுகூற்றங்களாகப் பிரிந்திருந்ததை உணர்த்துகின்றது.
சங்ககாலத்தின் பின்பு இரட்டியரும், கங்கரும் விசய காந்தபுரத்தைத்
தலைநகராக வைத்துக் கொண்டு கொங்கு நாட்டை ஆண்டன ரென்றும்,
அத் தலைநகர், கணவாய்மேலே பன்னிரண்டு கிராமங்களை அடுத்து
விளங்கியதாகவும் "கொங்கு தேசராசாக்கள்" என்ற நூல் கூறுகின்றது.

சைவ சமயப் பெரியாரான சுந்தரமூர்த்தி அடிகளார் "கொங்கிற்
குறும்பு" எனக் குறும்பு நாட்டைக் குறித்துள்ளதால் சுமார் 9 - ஆம்
நூற்றாண்டின் முன்பே நாட்டுப் பிரிவுகள் இருந்தமை அறிகின்றோம்.
சுமார் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொங்கு நாடு 42 பிரிவுகளுடன்
விளங்கியதைச் சிலசான்றுகளால் உணர்கின்றோம். கொங்கு நாட்டுக்கு
மேலும் இரண்டு சதகங்கள் இருப்பதையறிந்து அவற்றை மறையாமல்
காத்தருளினார் முதுபெரும் புலவர்எழுமாத்தூர் தெய்வ சிகாமணிக்
கவுண்டரவர்கள் அவர்தொகுப்பில் "பூந்துறைநாட்டுக் கட்டளை" என்ற
நூல் ஒன்று உள்ளது. அதில் ஒரு சாசனத்தின் தொடக்கம் மட்டும் உள்ளது.
அது வருமாறு :

பெரிய திருமலை நரேந்திர நாயக்கன் காரியத்துக்குக் கர்த்தர்
எம்பெருமாள் பிள்ளை கோபாலப் பிள்ளையவர்களுக்கு கலியுகாதி
4640 க்குச் செல்லாநின்ற அட்சய வருடம் மாசி மாதம் 20 ஆம் நாள்
பூர்வபட்சம் புனர்பூசம் சுக்கிரவாரம் சேர்ந்த நாளில் தாராபுரம் சூழ்ந்த
நாடு 24; தனாயக்கன்கோட்டை சூழ்ந்த மேல்கொங்கு நாடு 6; குன்னத்தூர்
துர்க்கம் சேர்ந்த வடகொங்கு நாடு 12. ஆக நாற்பத்து .... (மேல் ஓலை
கிடைக்கவில்லை)