வரலாறு
: மைசூர் இராச்சியத்தைச் சேர்ந்த கோலார்ப்
பட்டணத்தை இராஜதானியாகக் கொண்டு நீண்ட காலம் ஆண்டு வந்தவர்கள்
கங்கவமிசத்து அரசர்கள். இவர்கள் தம் மெய்க்கீர்த்திகளில் குவளாலபுர
பரமேசுரர்கள் என்றும், நந்தகிரி நாதர் என்றுங் கூறிக்கொள்ளுகிறார்கள்.
குவளாலபுர மென்பதே கோலார் என வழங்குகிறது.
அவ்வரசர்களில்
சீயகங்கன் என்னும் வேந்தன் ஒருவன் தமிழ்
இலக்கியங்களின் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததும் விரிந்து கிடப்பதுமான
தொல்காப்பியத்தைக் கற்று விதி விலக்குகளை அறிந்து கொள்வது சில
வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய மனிதர்க்கு அரிதாக இருக்கிறது.
ஆதலின் அந்நூலிற் கூறப்படும் எழுத்து முதலிய ஐந்திலக்கணங்களையும்
யாவரும் வருத்தமின்றி அறிந்து கொள்ளும்படி ஒவ்வொரு பகுதியையுஞ்
சுருக்கித் தொகை வகை விரியால் விளக்கி ஒரு இலக்கண நூலைச்
செய்தருளுக என்று அச்சீயகங்கன் வேண்டிக் கொண்டனன். பவணந்தி
என்னும் ஜைன முனிவர் நன்னூல் என்னும் பெயரால் ஒர் சிறந்த இலக்கண
நூல் செய்தனர்.
........
தமிழ்க் கடலுள்
அரும் பொரு ளைந்தையும் யாவரு முணர
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதுந்
தனதெனக் கோலித் தன்மத வாரணந்
திசைதோறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்தி செங்கோற்சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ......... |
எனவரும் நன்னூற்
சிறப்புப் பாயிரத்தே கூறப்பட்டுள்ளதால்
விளங்கும். இவனுக்கு அமராபரணன், திருவேகம்பன் என்று மறு
பெயர்களும் உண்டு என்பர்.
கி.பி.
1178 முதல் 1216 ஆம் வருடம் வரையில் அரசுபுரிந்த மூன்றாங்
குலோத்துங்க சோழன் காலத்தவன். இச்சீயகங்கன் மனைவி அரியபிள்ளை
திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனார் கோவிலில் நந்தாவிளக்குவைத்த
சாசனத்தால் விளங்குகிறது.
|