பக்கம் எண் :

64

இழிவு என்று கொண்டு அவ்விடத்தை விட்டுக் கவிஞர் புறப்பட்டு
நடந்தனர். உணவு படைத்த பின் புசித்தற்காகக் காமிண்டன் புலவரைத்
தேடினன். நடந்து செல்வதைத் தெரிந்த ஆணூர்ச் சர்க்கரை விரைந்து
சென்று புலவர் முன்னின்று, 'ஏனையா நடக்கிறீர்கள்; என்னகுறை நேர்ந்தது
மன்னித்துத் தெரிவியுங்கள்' என இரந்து கேட்டனர். மலர்ச்சி பெறாத
முகத்துடன் புலவர் மன்றாடியாரை நோக்கி, "ஐயா, எதிர்த்தோர்க்கு
மிண்டன் வித்துவான் களுக்குத் தொண்டன், என்ற விருது, உங்கள்
முன்னோர் அடைந்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு வந்தேன்.
உரையாடி உட் சென்ற நீவிர் உணவருந்துவதாக உங்கள் ஊழியர்களால்
கேள்வியுற்றேன். வந்தவர்களை உபசரித்து உணவு ஊட்டித் தான் புசிக்க
வேண்டுவது நல்ல குடிப்பிறந்த அறிவினரின் கடமை. அன்றியும் உண்ணீர்
உண்ணீர் என்று உபசரியார் இல்லத்திற் புசித்தல் தகாதெனத்
திரும்பிவிட்டேன். ஒரு புலவன் ஒருவரிடஞ் செல்வது அவனுக்குக்
கீர்த்தியை விளைப்பதற்கு ஆம். இதற்குமுன் புலவர் புகழ்ந்து
பாடியிராவிடில் நான் ஏன் தேடி வருகிறேன். வரும் வழியில் எத்தனை
லட்சம் மாந்தர்கள் இருக்கிறார்கள்? அவர் களிடத்துத் தங்காமல் உம்மைத்
தேடி வந்தது தமிழபிமானமுள்ள இடம் என்பது தானே? என முகஞ்
சோர்ந்து கீழ் நோக்கிக் கூறினர். இதை யுணர்ந்த சர்க்கரையார், ஐயா,
புலவர் திலகமே, அறிஞர்களின் வடிவம், பிறப்பு முதலியவற்றை விசாரித்தல்
மரபன்றே. ரிஷிகளின் தவஞானங்களைத்தானே தெரிந்து கொள்கிறார்கள்!
புலவர்கள் பிரசங்கங்களாலும் நூல்களாலும் உலகிற்கு உபகரிப்பதுபோலப்
பயன் விளைவிப்பார் பிறரில்லையெனல் அறிந்துள்ளேன். என்னைக்
கவுரவிக்க வந்துள்ள தங்களை இகழவில்லையே என்று நெய்யைக்
கொதிக்கவைத்து அதிற் கையை விட்டுத் துழாவிச் சத்தியஞ் செய்தனர்.
பின்பு புலவர் ஒருவாறு திருப்தி கொண்டனர். அருகிருந்து இருவரும்
உணவருந்தினர். ஐயா மன்றாடியாரே, நீர் சத்தியஞ் செய்தும் மனம்
சமாதானமாகவில்லை. என்றாலும் அது உண்மையாயின் எனது எச்சில்
வாயைக் கழுவி விடுவீரா? என்ற கவிஞர் மொழிக்கு மெத்த மகிழ்ச்சி
கொண்டு புலவரது எச்சில் வாயையும் கையையும் சர்க்கரைப் பெருந்தகை
யலம்பிவிட்டனர் புலவர் மெத்தவும் மகிழ்ந்து இவர்மீது கொண்ட
பெருங்காதலால் ஒரு காதல் என்னும் பிரபந்தமியற்றி அரங்கேற்றினர்.
புலவர் மனமுவக்குமாறு பரிசில் உதவி மகிழ்வித்தனர் என்பர்.