பக்கம் எண் :

95

சரியன்று என்று மற்றைவைஷ்ணவர்களை உண்ணும்படிசெய்து, உடையவர்
பாலுண்டு சயனித்தனர். மற்றை வைஷணவர்கள் அன்னமருந்து உறங்கினர்.

     இந்த அம்மையார் பின்பு ஆகவேண்டிய காரியங்களைச் செய்து
முடித்துத் தரையில் தனியே படுத்தனள், இதுவரை துயின்ற கணவனார்
விழித்து நீ கீழே படுக்கக் காரணமென்ன வென்று மனையாளைக் கேட்டனர்.
உடையவர் முதலிய பெரியோர்கள் எழுந்தருளி உள்ளார்கள். உடையவர்
மாத்திரம் அமுது அருந்தவில்லை என்று வருந்தினள். ஆனால் அதற்கு
என்னாலாக வேண்டியதிருந்தால் செய்கிறேன் என்றனர் சமஸ்காரஞ் செய்து
கொண்டால் நாளை மத்தியானம் அருந்துவ ரென்றனள். அப்படியே செய்து
கொள்கிறேனென்றனர். காலையில் மனமுவந்த உடையவர்,
சதிபதிகளிருவருக்கும் முறைபடிக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்தனர். பின்பு
அன்னமருந்தினார்கள். வழி நடைக்களைப்பு முதலின நீங்கி நன்றாக
நித்திரை புரிந்தார்கள். சிலநாள் அன்புடன் அம்மனையிலேயே வசித்துப்
பின்பு வஸ்திரம் காஷாயம் திரிதண்டம் மற்றையனவும் பெற்றுக்கொண்டு
மேற்றிசைப் பிரயாணமாயினர்.

                       தனியன்கள்

     ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து தான் பிறந்த (கொங்கு) தேசத்துச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.

     உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.

     உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.