பக்கம் எண் :

98

                    காளிங்கராயன்

70.காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ
மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) காவேரி நதியுடன் கூடுகின்ற பவானியாற்றை
அணைகட்டிப் பாசனஞ்செய்து வடிநீர் காஞ்சியாற்றில் விழும்படி உபகரித்த
வெற்றியாளனான காளிங்கராயன் என்பவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- மேல் கரைப் பூந்துறை வெள்ளோட்டில் கொங்கு
வேளாளரில் சாத்தந்தை குலத்தில் ஒரு வாலிபன் தன் முயற்சியால்
வீரபாண்டியன் சேனாதிபதியானான். தமிழரசர் மந்திரி சேனாதிபதிகளுக்குக்
காளிங்கராயன் மாளவராயன் (மழவராயன்) என்னும் பட்டங்கொடுப்பதுண்டு.
ஆதலால் காளிங்கராயன் என்ற பட்டத்தைப் பெற்றுப் புகழுடன் வாழ்ந்து
வந்தான். தான் பிறந்த நாட்டுக்குந் தன்குலத்துக்குந் தனக்கும் புகழும்
புண்ணியமுந் தோன்றக் காவிரியுடன் சங்கமமாகின்ற இடத்துக்கு அணித்தாக
பவானி நதியைத் தடுத்து அணைகட்டினான். இன்னும் அவ்வணைக்குக்
காளிங்கராயன் அணை என்ற பெயர் வழங்குகின்றது. கோயமுத்தூருக்
கடுத்த ஊற்றுக்குழி ஜமீன்தார் (பாளயகாரர்) இவன் சந்ததியானதால் நாளுங்
காளிங்கராயன் என்ற பட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அந்த மந்திரி
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்த நாரீசுரருக்கு மானியம் விட்டிருந்ததாகத்
தெரிகிறது.

                   (மேற்)

ஆலிங்க நாகமலை யர்த்தநா ரீசுரர்க்குக்
காலிங்க ராயனெனுங் காராளன் - மாலிங்க
மென்றேமா மந்தை நிலமேழுமா வுங்கொடுத்தான்
நன்றே புகழெய் தினான்

(திருச்செங் - திருப்பணிமாலை)

திரைகொண்ட வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை
உரைகொண்ட சோழன்மு னாளடைத் தானுல கேழறிய
வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கவவ் வானிதனைக்
கரைகொண்ட டைத்தவன் வெள்ளோடை சாத்தந்தை
                                      காளிங்கனே.

(தனிப்பாட்டு)