முதிர்ந்து - (தமது) சொற்களின் இனிமை
மிகுந்திருக்குமாறு, வெண்பாவால் - நேரிசை
வெண்பாக்களினால், பாரார் நிடதபதி நளன்சீர் -
பூவுலகிற் சிறந்த நிடதநாட்டு மன்னனாகிய நளனின்
சிறப்பு மிக்க வரலாற்றை, பேர் ஆர் புகழேந்தி
பேசினான் - (கல்வி கேள்விகளினால்) சீர்த்தி
வாய்ந்த புகழேந்திப் புலவர் பாடினார்.
(க - து.) புகழேந்திப் புலவர்
நளமன்னன் வரலாற்றை நேரிசை வெண்பாக்களாற்
பாடினார்.
(வி - ரை.) ‘பாரார் நிடதம்’
என்றதனால் மற்ற எந்நாடும் இந் நாட்டுக்கு
ஒப்பாகா வண்ணம் விளைவும் செல்வமும் சிறப்பு
மிக்க நாடென்பது பெற்றாம். 1‘அறஞ்செய்வார்க்கும்
அஃதிடம் பொருள் செய்வார்க்கும் அஃதிடம்’
என்றார், ஏமாங்கதநாட்டைச் சிறப்பித்துக் கூற
வந்த திருத்தக்க தேவரும். வள்ளுவரும் 2’நாடென்ப
நாடா வளத்தன நாடல்ல, நாட வளந்தரும் நாடு’
என்றார். இங்குக் கூறப்பட்டவைகட்கு ஏற்ப, எல்லா
நலங்களும் தரும் தன்மைத்தாய்ப் பிற நாட்டை
எதற்கும் நாடிச் செல்லா நாடாக மிளிர்தலான்
இவ்வாறு சிறப்பித்துக் கூறினார்.
‘நிடதம்’ என்னும் மலையின் பெயர்
அதனையுடைய நாட்டை உணர்த்தி நின்றது. நிடதமலை
மேருமலைக்குத் தெற்கேயுள்ள தான நிடதம் ஏமகூடம்
மந்தாரம் என்னும் மலைகள் மூன்றனுள் ஒன்றாகக்
கூறுவர், ஆன்றோர். ஆர் - முக்கால வினைத்தொகை.
புகழேந்தி - புகழை ஏந்தியவர் என்று பொருள்படும்.
இது காரணப் பெயராக இருக்கின்றது. இவரின்
இயற்பெயர் மறைந்து இப் பெயரே பெருவழக்காய்
வழங்குவதாயிற்று. இவ்வாறு முற்காலப் புலவர்கள்
பெயர்கள் அவர்கள் பாடிய பாடல்களினாலும், ஊர்ப்
பெயர்களினாலும் வழங்குதல் காணலாம். ‘கல்பொருசிறு
நுரையார்,’ ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்,’ ‘தொடித்தலை
விழுத்தண்டினார்’ இவை அவர்கள் பாடிய
பாடல்களின் சொற்றொடரினால் வந்த பெயர்கள். ‘அரிசில்கிழார்,’
‘கோவூர்கிழார்,’ ஊரினால் வந்த பெயர்கள்.
தற்காலப் புலவர்களினும் பண்டிதமணி என்பதும், பாரதியார்,
பாரதிதாசன், கவிமணி, நாட்டார் என்பவைகளும்
அவ்வவர்தம் இயற்யெரைக் குறிக்காமல் சிறப்புப்
பெயராக வழங்குதல்போலக் கொள்க.
செழியன் - பாண்டியன். புகழ்,
பொருள்களில் மிக்கோன் என்பது பொருள். சென்னி
- சோழன். திறைகொள்ளுதல் - தம் வயப்படுத்தல்.
1. சீவக சிந் : 2, திருக் : 738.
|