|
கமலம் - தாமரை; அதன் நூலைக்
குறித்தலால் முதலாகுபெயர். தொடை -
தொடுக்கப்படுவது. தேன் - வண்டு. தேனை
உண்ணுதல்பற்றி வந்த பெயர். ஆதலால் ஆகுபெயர்.
நளன் வரலாற்றில் இந்திரன் முதலிய
தேவர்களும், கலிபுருடனும், கார்க்கோடனும்
தொடர்பு கொண்டிருப்பதால், ‘தெய்வத்திருக்கதை’
என்றார். அன்றியும் நளவேந்தன், மறங்கடிந்து
அறத்தாற்றில் நின்று உலகத்தைக்காத்த முடியுடைப்
பேரரசனாகலான்,
1‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்’
என்று தமிழ்மறையும்,
2‘திருவுடை மன்னரைக் காணின்
திருமாலைக் கண்டேனே என்னும்’
என்று ஆழ்வாரும் குறித்தலான்,
தெய்வத் தன்மையுடைய கதையென்று கொள்ளலுமாம்.
எத்துணை ஆற்றல் படைத்தவராயினும்
பணிவு வேண்டுமாதலால் ஈங்கே அறிவுடைச்
சான்றோர்க்கு அடக்கம் கூறினார். என்னை?
3‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’
என்பது திருவள்ளுவர் செம்மொழி. (6)
நூலாசிரியர் பெயர்
7. பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பால்
பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்
செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்
மொழியின் சுவையே முதிர்ந்து.
(இ - ள்.) தார் ஆர் செழியனையும்
சென்னியையும் - மாலையையணிந்த பாண்டியனையும்
சோழனையும், சேர திறைகொள் - ஒருங்கே தமக்கு
அடக்கமாக்கிக் கொள்ளும், மொழியின் சுவையே
--------------------------
1. திருக் : 388. 2. திருவாய்மொழி, 34: 8.
3. திருக் : 125.
|